பெங்களூரு:

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு முதல் வகுப்பு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதை, விசாரணைக் குழு உறுதி செய்துள்ளது. இது விதிமுறையை மீறிய செயல் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


சொத்து வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற சசிகலாவும் அவரது உறவினர் இளவரசியும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர்.

நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற கைதியான சசிகலாவுக்கு, சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படுவதாக சிறைத்துறை துணை டிஐஜி டி. ரூபா குற்றஞ்சாட்டினார். இதற்கு சிறைத்துறை டிஜிபியாக இருந்த சத்யநாராணயன ராவ் உடந்தையாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில். பெங்களூரு மத்திய சிறையில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்தும், இதற்காக ஆவணங்களை திருத்தியது குறித்தும் விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் விசாரணைக் குழுவை கர்நாடக அரசு நியமித்தது.

சிறையில் உள்ள அறைகளில், 5 அறைகள் சசிகலாவுக்கும் இளவரசிக்கும் ஒதுக்கப்பட்டு, அவர்களுக்கு அங்கேயே சமையல் செய்து கொள்ளவும் அனுமதி தரப்பட்டது. மேலும் சசிகலா சொந்தமாக சமைத்துச் சாப்பிட்டதற்கான சாட்சியாக அவர் அறையில் குக்கர் இருந்ததையும் ரூபா வெளியிட்டது குறித்தும் இக்குழு விசாரித்தது.

இது குறித்து கர்நாடக அரசுக்கு விசாரணைக் குழு தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சசிகலா அறைக்கு சென்று ஆய்வு செய்தபோது, குக்கர்  இல்லை. ஆனால் அங்கு மஞ்சள் தூள் இருந்தது. சமையலுக்கு பயன்படுத்தியதுதான் என்பதை உறுதி செய்தோம்.

சிறைக் கைதிகளின் உடை அணியாமல், வண்ண உடைகளை அணிந்து கையில் பையை பிடித்தபடி சசிகலாவும், இளவரசியும் நடமாடும் காட்சி கேமிராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து கூறிய சிறைத்துறையினர், விருந்தினர்களை பார்த்து விட்டு வருகின்றனர் என்றனர்.
அந்த காட்சி பதிவான நேரத்தை வைத்துப் பார்க்கும் போது, அது பொய் என்று நிரூபனம் ஆனது.

சிறையில் சசிகலாவுக்கு சொந்தமாக சமையல் செய்து கொள்ள அனுமதித்ததும், சிறையில் அவருக்கு 5 அறைகள் ஒதுக்கியதும் விசாரணையில் உண்மை என்று தெரியவந்தது.

இது குறித்து சிறைத்து துறை தலைமை கண்காணிப்பாளர் அளித்த விளக்கத்தில், நீதிமன்ற உத்தரவுப்படி சசிகலா முதல் வகுப்பு கைதியாக பாவிக்கப்படுவதாக கூறினார். டிஜிபி ஒப்புதலின் பேரிலேயே இத்தகைய சிறப்பு வசதிகளை செய்து கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த டிஜிபி சத்நாராயண ராவ், சசிகலாவுக்கு முதல் வகுப்பு அளிப்பது குறித்து நீதிமன்ற உத்தரவை பெறுமாறு சிறைத்துறை தலைமை கண்காணிப்பாளருக்கு கடிதம் அனுப்பினேன். அதன் அடிப்படையில் நீதிமன்றத்தை அணுகி, சசிகலாவுக்கு முதல் வகுப்பு வசதி தரப்பட்டுள்ளதா என்பதை அறியுமாறு குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால் சசிகலாவின் இதுபோன்ற உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிந்தது.
இதன் அடிப்படையில், சிறையில் முதல் வகுப்பு வேண்டும் என்ற சசிகலாவின் கோரிக்கையை நிராகரிக்குமாறு மாநில உள்துறை அமைச்சகத்துக்கும் கடிதம் அனுப்பினேன் என்று டிஜிபி விளக்கம் அளித்தார்.

ஆனால், இதன் பிறகும் சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதி செய்யப்பட்டு வந்தது. இதேபோன்று முத்திரைத்தாள் மோசடியில் சிறையில் இருக்கும் அப்துல் கரீம் தெல்கிக்கு, சிறையில் இருக்கும் விசாரணைக் கைதிகளை உதவிக்கு அனுப்பியதும் உறுதியாகியிருக்கிறது.

தண்டிக்கப்பட்ட கைதிகளிடம் இருந்து விசாரணைக் கைதிகளை தள்ளிவைக்க வேண்டும் கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது.
எனவே சசிகலா, இளவரசி மற்றும் அப்துல் கரீம் தெல்கி ஆகியோருக்கு விதிமுறையை மீறி சிறப்பு சலுகை செய்து தரப்பட்டுள்ளது உண்மைதான்.

இது தொடர்பாக சிறைத் துறையினர் லஞ்சம் பெற்றனரா? என்பது குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைதான் விசாரிக்க வேண்டும். இது தொடர்பாக ஏற்கெனவே சிறைத்துறை உயர் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கர்நாடக அரசிடம் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.