புதுடெல்லி:

சமீபகாலமாக இந்தியாவில் உணவு அரசியல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அசைவம் சாப்பிடுவோர் தண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.


உண்மையிலேயே நம் இந்திய நாட்டில் இந்துக்களின் உணவு சைவ உணவா?

இல்லவே இல்லை. எல்லாம் அரசியல்வாதிகளால் அப்படி மாற்றப்பட்டுள்ளது என்பதே கடந்த கால வரலாற்று சான்றுகள் மூலம் தெளிவாகிறது.
இது குறித்து இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரையின் விவரம் வருமாறு:

கடந்த 1857-ம் ஆண்டு முதல் சுதந்திரப் போர் என்று கருதப்படும் புரட்சி ஏற்பட்டபோது, பிரிட்டிஷ் ராணுவம் தன் வீரர்களுக்கு பூனைகள் மீது இறைச்சிக் கொழுப்புகளை தடவிக் கொடுத்ததாக கதை உண்டு.
காலப் போக்கில் வீரர்கள் மாட்டுக் கொழுப்பையும் பன்றிக் கொழுப்பையும் சாப்பிட்டதாக சொல்வதுண்டு. இப்படி உணவு கொடுப்பதை எதிர்த்துத்தான் ராணுவத்தில் பணியாற்றிய இந்து மற்றும் முஸ்லீம் வீரர்கள் புரட்சியில் ஈடுபட்டதாக கதை உண்டு. இதனை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மறுத்தனர்.

1857-ல் மட்டும் உணவு அரசியலாக்கப்படவில்லை. இப்போதும் அதுதான் நடக்கிறது.

சாம்பார் சாதமும் பிரியாணியும் அரிசியில் இருந்துதான் செய்யப்படுகிறது. அதைப் பார்க்காமல், இந்து உணவு என்றும் முஸ்லிம் உணவு என்றும் பிரித்துப் பார்க்கப்படுகிறது. இந்த விவாதம் நீண்ட காலமாக தொடர்வதற்கு அரசியலே காரணம்.

நல்ல இந்துக்கள் சைவ உணவையே உண்பார்கள், மாமிசம் சாப்பிடுவது பெரும் பாவம், மாட்டுக் கறி சாப்பிடுவது மிகப் பெரிய பாவம் என்ற பார்வையும் உலா வருகிறது.

பிரியாணி உணவை இந்தியா முழுவதும் முகலாய மன்னர்கள் அறிமுகப்படுத்தியதாகவும், இந்தியாவின் சுத்த சைவ உணவு கலாச்சாரத்தை அவர்கள் சீரழித்துவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுவதுண்டு.

உண்மை நிலவரம் என்னவென்றால், இந்தியா ஒரு போதும் சைவ நாடாக இருந்ததில்லை. பழங்கால மன்னர்கள் அனைவருமே மாமிச உணவையும், கோழிக் கறியையும் உணவாகக் கொண்டுள்ளனர்.
ஆமை, மான், மயில் மற்றும் மற்ற பறவைகள், மிருகங்களையும் அவர்கள் உணவாகக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

இந்த சைவ உணவு கலாச்சாரம் ஜெயின் சமூகத்திடமிருந்துதான் வந்துள்ளது. தலாய் லாமா இறைச்சி உண்கிறார் என்று  இந்தியாவில் பேசிக் கொள்கின்றோம். அது தவறு. சிகிச்சைகாக அவரது மருத்துவர்களின் பரிந்துரையின்படியே அவர் சிவப்பு இறைச்சியை உண்கிறார்.

இவ்வாறு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.