புதுடெல்லி:

திமிர் பிடித்த, பிரிவினையை ஏற்படுத்தும் மோடி அரசுக்கு எதிராக போராடுவதை வலியுறுத்தும் வகையிலேயே கொல்கத்தா பேரணி நடந்துள்ளதாக சோனியா காந்தி கூறியுள்ளார்.


காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நடக்கப்போகும் மக்களவைத் தேர்தல் சாதாரணமானது அல்ல. திமிர் பிடித்த, பிரிவினையை ஏற்படுத்தும் மோடி அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் நடத்திய பேரணியில் நாடு முழுவதும் இருந்து முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

எதிர்வரும் மக்களவை தேர்தல் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையையும் நமது மதச்சார்பின்மையையும், சகிப்புத் தன்மையையும் மீட்டெடுக்கும். இந்தியாவின் அரசியல் சாசனத்தை அழிக்க நினைக்கும் சக்திகள் தோற்கடிக்கப்படுவார்கள்.

அனைத்து கட்டமைப்பும் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சிதைக்கப்பட்டுள்ளது. பழமைவாதத்தை நிலைநிறுத்த முயற்சிப்பதை காண முடிகிறது.

எனவே, வரும் மக்களவை தேர்தல் சாதாரணமான ஒன்றல்ல. வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு, விவசாயிகள் பிரச்சினை ஆகியவற்றால், மோடி ஆட்சியில் மக்கள் பொருளாதார ரீதியில் நசுக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு சோனியா காந்தி கூறியுள்ளார்.