லக்கிம்பூர் கேரி

உபி வன்முறையில்  பலியான 4 விவசாயிகளுக்கான இறுதி பிரார்த்தனை நிகழ்வில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கலந்து கொள்கிறார்.

கடந்த 3 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் மோதியதில், 4 விவசாயிகள் பலியாகினர். இதைத் தொடர்ந்த வன்முறையில் பாஜகவினர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.

இச் சம்பவத்தின் போது ஆசிஷ் மிஸ்ரா சம்பவ இடத்தில் இருந்ததாகக் கூறப்படு கிறது.  இதனால் அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  கடந்த சனிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்காகச் சிறப்புப் புலனாய்வுக் குழு முன்பு ஆஜரான ஆசிஷ் மிஸ்ரா, கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று பலியான 4 விவசாயிகளுக்கு வன்முறை நடந்த இடத்திற்கு அருகில் திகோனியா கிராமத்தில் இறுதி பிரார்த்தனை நிகழ்ச்சி நடக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் விவசாயிகள் இதில் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சியில் அரசியல் கட்சிகளுக்கு அனுமதி இல்லை என விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் அறிவித்துள்ளார்.

இந்த இறுதி நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொள்வதாக அறிவித்துள்ளார். இதனால் அந்தப் பகுதியில் அசம்பாவிதம் ஏற்படலாம் என்னும் அச்சத்தால் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.