டில்லி

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகியதை பிரியங்கா காந்தி பாராட்டி உள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்ட இரு தொகுதிகளில் அமேதியில் பாஜக அமைச்சர் ஸ்மிரிதி இராணியிடம் தோல்வி அடைந்தார். இந்த தோல்விகளுக்கு பொறுப்பு ஏற்று தாம் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி கடந்த மே மாதம் 25 ஆம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் அறிவித்தார்.

இதற்கு செயற்குழு ஒப்புதல் தரவில்லை. பல மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியின் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் ராகுல் காந்தி தனது ராஜினாமா முடிவை மாற்றிக் கொள்ள தயாராக இல்லை. நேற்று அவர் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அத்துடன் விரைவில் மாற்றுத் தலைவர் ஒருவரை நியமிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

ராகுல் காந்தியின் முடிவு குறித்து அவர் சகோதரியும் காங்கிரஸ் செயலருமான பிரியங்கா காந்தி வதேரா தனது டிவிட்டரில், “உங்களைப் போல் இவ்வாறு முடிவு எடுக்கும் தைரியம் மிகச் சிலருக்கு அட்டுமே இருக்கும். உங்களது இந்த முடிவுக்கு எனது ஆழ்ந்த மரியாதையை அளிக்கிறேன்” என பதிந்து புகழ்ந்துள்ளார்.