சென்னை,
தமிழகத்திலுள்ள பெரும்பாலான ரெயில் நிலையங்கள் தனியாரிடம் தாரை வார்க்கப்படுகிறது. இதற்காக ரூ.350 கோடி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தற்போது நாடு முழுவதும் ரெயில் நிலையங்களை ரெயில்வே ஊழியர்களை கொண்டு பராமரித்து வருகிறது. இதை தனியாரிடம் குத்தகைக்கு கொடுக்க மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதைத்தொடர்ந்து தமிழகத்திலுள்ள சென்னை, எழும்பூர் உள்பட 27 ரெயில்நிலையங்களை குத்தகைக்கு விட ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்தின்படி, தெற்குரெயில்வே கோட்டத்தில் 50 ரெயில் நிலையங்களும், தமிழகத்தில் 27ரெயில் நிலையங்களும் விரைவில் தனியார் மயமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் முதல்கட்டமாக சென்ட்ரல்ரெயில்நிலையத்தில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
கடந்த ரெயில்வே பட்ஜெட்டின்போது அரசு கூறியதை தொடர்ந்து, நாடு முழுவதும் அதிக வருமானம் ஈட்டும் 400 ரெயில் நிலையங்களை உலகத் தரத்துக்கு மாற்றும் வகையில் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த முனைந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த திட்டத்தின் முதல் கட்டப்பணிகளைரெயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு தொடங்கிவைத்தார்.
இதன் முதல்கட்டமாக சென்னை சென்ட்ரல் உள்பட 23 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. .இதற்காக ரூ. 350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக ரெயில் நிலையத்தில் ஷாப்பிங் மால் கட்டவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து கிடைக்கும் வருமானம் ரெயில்வேதுறையின் பயன்பாட்டுக்கு உதவும் என்றும் கூறப்படுகிறது.
இந்த திட்டம் குறித்து ஆலோசனை தர ‘பாஸ்டன் கன்சல்டிங் குரூப்’ என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம்ரெயில்நிலையங்களை தூய்மைப்படுத்துவது, பராமரிப்பது, உள்ளிட்ட பணிகளை தனியார் நிறுவனங்களே மேற்கொள்ளும்.
ரெயில்வே துறையின் பயணிகளுக்கு டிக்கெட் கொடுப்பது, ரெயில்களை இயக்குவது, சிக்னல் தொடர்பான வேலைகளை கவனிப்பது தவிர்த்து மற்ற வேலைகள் அனைத்தும் தனியாரிடம் குத்தகைக்கு விட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முதல் கட்டமாக சென்னை சென்ட்ரல் ரெயில்நிலையமும், 2வது கட்டத்தில் சென்னை எழும்பூர், அரக்கோணம், செங்கல்பட்டு,ஜோலார்பேட்டை, காட்பாடி, தாம்பரம், சேலம் கோட்டத்தில் கோவை, கரூர், கரூர், ஈரோடு,மட்டுப்பாளையம், சேலம் , திருப்பூர், கும்பகோணம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, விழுப்புரம், மதுரை, திண்டுக்கல், கோவில்பட்டி, ராமேஸ்வரம், திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய ரெயில் நிலையங்கள் தனியார் மயமாக்கப்படும் என தெரிகிறது.