டில்லி,

நாட்டில் உள்ள மாவட்ட மருத்துவமனைகளை தனியாருக்கு குத்தகைக்கு விட மோடி தலைமையிலான அரசு முடிவு செய்ய இருப்பதாக நிதிஆயோக் அதிகாரி கூறி உள்ளார்.

இந்த தகவல் சமூக ஆர்வலர் ஒருவர் ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது.

மோடி தலைமையிலான பாதியஜனதா அரசு பதவியேற்றதை தொடர்ந்து, மத்திய திட்டக்குழுவை கலைத்துவிட்டு, அதற்கு மாற்றாக ‘நிதி ஆயோக்’ என்ற புதிய அமைப்பு அமைக்கப்பட்டது.

இந்த நிதி ஆயோக் உலக வங்கி வழிகாட்டுதல் படி பல்வேறு அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க வலியுறுத்தி வருகிறது.

ஏற்கனவே பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகளை விற்பதன் மூலம், 56 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் திரட்ட, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

மேலும், விவசாயிகளும் வருமான வரி கட்ட வேண்டும் என்றும், தேர்தல் செலவை குறைக்கும் வகையில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும், அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை நாட்டில் செயல்படுத்த முயற்சித்து வருகிறது.

இதன் அடுத்தக்கட்டமாக மாநிலங்களில் உள்ள மாவட்ட மருத்துவமனைகளை 30 ஆண்டுகள் தனியாருக்கு குத்தகைக்கு விடவும் நிதி ஆயோக் முடிவு செய்துள்ளது.

உலக வங்கியின் வழிகாட்டுதலின்படி மாவட்ட மருத்துவமனைகள் தனியாரிடம் ஒப்படைக்கப் படும் என்றும்,  இந்த மருத்துவமனைகள் தொற்றாத நோய்களுக்கு மட்டுமே அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தில், மருத்துவக் காப்பீடு உள்ளவர்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கும்.  காப்பீடு இல்லாதவர்களுக்கு படுக்கை வசதி அளிக்கப்படமாட்டாது போன்ற பல்வேறு நிபந்தனைகள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட  மருத்துவமனைகள் அமைக்க தனியாருக்கு ஒரு தவனை நிதியுதவி அரசால் வழங்கப்படும் என்றும் கூறி உள்ளது.

நிதி ஆயோக்கின் இந்த முடிவுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையலும், இதுகுறித்து கருத்துக்கள் கூற  மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கோ, மாநில சுகாதாரத் துறைகளுக்கோ வாய்ப்பு கூட தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

ஏற்கனவே மோடி தலைமையிலான அரசு, ஏழை எளிய மக்களை கண்டுகொள்ளாமல், தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கி வருகிறது.

இந்த நிலையில், நாட்டின் அடிமட்ட ஏழை எளிய  மக்களின் வாழ்வாதாரமான அரசு பள்ளிக்கூடங்கள், அரசு மருத்துவமனைகள் போன்றவற்றையும் தனியாருக்கு தாரை வார்க்க முன்வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.