சென்னை: தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்த தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அது திரும்பப் பெறப்படுகிறது அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளர்.

தமிழக அரசின் திருத்த மசோதா, உயர்கல்வியை தனியார்மயமாக்கும்” என அதிமுக, பாமக உள்பட பல எதிர்க்கட்சிகளும், பல  கல்வியாளர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திமுக அரசு பின்வாங்கி உள்ளது. 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு திரும்பபெறப்பட்டு உரிய மறு ஆய்வு செய்யப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் ர் கோவி. செழியன்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு குறித்து சமூக ஊடகங்களிலும், பொது வெளியிலும் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இப்பொருள் குறித்து சில விவரங்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

தற்போது தமிழ்நாட்டில் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் சதவீதம் இந்தியாவிலேயே அதிகபட்சமாக உள்ள நிலையில், மேலும் அதிகமான எண்ணிக்கையில் உயர்கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் துவக்கப்படுவதற்கான தேவை உள்ளது என்பதை அனைவரும் அறிவோம்.

இந்தச் சூழ்நிலையில் தற்போது இயங்கிவரும் தனியார் கல்வி நிறுவனங்கள். மாநில தனியார் பல்கலைக்கழகங்களாக உயர விழையும்போதும், புதிதாக தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்குவதற்கும் தற்போதுள்ள சில வழிமுறைகளை எளிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்தச் சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டது.

இச்சட்டத்திருத்தத்தில் அதேசமயம் இவ்வாறு தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாகும்போது அதனால் மாணவர்கள் நலனோ. பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நலனோ, எந்த வகையிலும் பாதிக்கப்படாத வண்ணம் உரிய சட்ட பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

உயர்கல்வியை பொறுத்தவரை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்ந்துவரும் தமிழ்நாட்டில், தற்போதுள்ள தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம் 2019, பிரிவு 4-இன்படி, தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு குறைந்தபட்ச நில அளவு 100 ஏக்கர் தொடர்ச்சியான நிலம் தேவைப்படுகிறது. ஆனால் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் அத்தகைய மிகப்பெரிய அளவிலான தொடர்ச்சியான நிலத்தை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக உள்ளது.

எனவே. வேகமாக நகரமயமாகி வரும் தமிழ்நாட்டில் நிலங்களின் மதிப்பும் உயர்ந்து வருவதால் புதிய பல்கலைக்கழகங்களைத் தொடங்குவதற்கும். பெரிய கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக தங்களை மாற்றிக்கொள்ள / தரம் உயர்த்திக்கொள்ள விழையும்போதும் மேற்படி குறைந்தபட்ச நில அளவின் தேவை ஒரு சவாலாக உள்ளது.

தனியார் இந்தச் சூழ்நிலையில் பிற அண்டை மாநிலங்களின் பல்கலைக்கழகங்களின் சட்டங்களுக்கு இணங்க. நிலத்தின் அளவு குறைக்கப்பட்டால், பல்கலைக்கழகங்களாக மாற விரும்பும் தனியார் கல்வி நிறுவனங்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படும் என்ற கருத்துகள் பெறப்பட்டன. இதன் மூலம். புதிய தனியார் பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் அமைவதையும், விதிமுறைகளின்படி தகுதியுள்ள தனியார் கல்லூரிகள் மாநில தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றம் பெறுவதையும் ஊக்குவிக்க முடியும். எனவே. மாணவர் சமூகத்தின் நலனுக்காகவும், மாநிலத்தில் உயர்கல்வியை மேலும் மேம்படுத்தவும், தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்குத் தேவையான நிலங்கள் தொடர்பான விதிமுறைகளை எளிமைப்படுத்த இந்த சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தப் புதிய சட்டமுன்வடிவின்படி குறைந்தபட்ச நில அளவு கீழ்க்கண்டவாறு வரையறுக்கப்பட்டுள்ளது;

மாநகராட்சி – 25 ஏக்கர்

நகராட்சி அல்லது பேரூராட்சி – 35 ஏக்கர்

பிற பகுதிகள் – 50 ஏக்கர்

சமூகநீதியிலும் உயர்கல்வி மேம்பாட்டிலும் ஆழ்ந்த அக்கறையும் ஈடுபாடும் கொண்ட திராவிட மாடல் அரசு, எந்த நிலையிலும் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாது. ஆசிரியர் நியமனம் மற்றும் மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை பின்பற்றுவது, கல்விக் கட்டணத்தை அரசே நிர்ணயிப்பது, பணியாளர் நலனை பாதுகாப்பது போன்ற அம்சங்களை உத்தரவாதப்படுத்தியும். தமிழ்நாட்டின் பாரம்பரிய கல்லூரிகள் அடுத்த உயர்நிலையை எட்டுவதை மனதில் கொண்டு இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

அதேசமயம் மாநில இடஒதுக்கீட்டு உரிமையை கருத்தில்கொள்ளாத நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு இதுகாறும் நம் அரசு அனுமதி அளிக்கவில்லை என்பதையும் இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விழைகிறேன்.

இருப்பினும், இப்பொருள் குறித்து சட்டமன்றப் பேரவையில் மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையிலும், சமூக ஊடகங்களிலும், பொது வெளியிலும் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளின் அடிப்படையிலும் இந்தச் சட்ட முன்வடிவு குறித்து கல்வியாளர்கள், துறை சார்ந்த வல்லுநர்கள், கல்வித்துறை அலுவலர்கள் ஆகியோரின் கருத்துக்களைப் பெற்று, அதன் அடிப்படையில் உரிய மேல் நடவடிக்கை தொடரலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுரையின்படி இந்தச் சட்டமுன்வடிவு திரும்பப் பெறப்பட்டு உரிய மறு ஆய்வு செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, `தமிழக அரசின் திருத்த மசோதா, உயர்கல்வியை தனியார்மயமாக்கும்”  அரசயில் கட்சிகள்  கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மசோதா  பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, அதன்மீதான விவாதத்தின்போது பேசிய அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும், இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கல்வியாளர்களும் கண்டித்து வருகின்றனர்.

இந்த சட்ட முன்வரைவை கடுமையாக கண்டித்து, ‘மக்கள் கல்வி கூட்டியக்கம்’ ஒருங்கிணைப்பாளர்கள், பேராசிரியர்கள் இரா. முரளி, வீ. அரசு, ப. சிவகுமார், கல்வியாளர் கண். குறிஞ்சி ஆகியோர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

“ஏற்கனவே தனியாருக்கு பல்கலைக்கழகங்கள் திறக்க அனுமதி அளித்துவிட்டு, அதில் மேலும் சலுகைகள் வழங்கும் வரைவுத் திட்டம் இது. இது முற்றிலும் உயர்கல்வியை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டமாகும். உயர்கல்வி வழங்கும் பொறுப்பிலிருந்து அரசு தன்னை முற்றிலுமாக விடுவித்துக்கொள்ளும் நடவடிக்கையே இது. நடுவண் அரசின் தேசிய கல்விக் கொள்கையை இம்மி பிசகாமல் அப்படியே நிறைவேற்றும் முயற்சியே

இதன்படி, தற்போது செயல்பட்டு வரும் எந்த ஒரு தனியார் கல்லூரியும் விரும்பினால் பல்கலைக்கழகமாக தங்களை மாற்றிக்கொள்ளலாம். அப்படியானால், அவர்கள் வைப்பதுதான் சட்டம். ஆசிரியர்கள், அலுவலர்கள் ஊதிய விகிதம் முதல் கல்வித் திட்டங்கள், மாணவர்களின் கட்டணம் மற்றும் சேர்க்கை முறை வரை- எல்லாவற்றையும் தனியாரே தீர்மானிப்பார்கள்.

பல்கலைக்கழகம் தொடங்க குறைந்தது 100 ஏக்கர் நிலம் வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி, 25 ஏக்கர் போதும் என்ற தளர்வு யாருக்காக? அரசு எதற்காக இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருகிறது? தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழகங்களின் நிலைமை, அரசின் கவனிப்பு இல்லாமல் சீர்கெட்டுப் போயுள்ளது. அதைச் சரிசெய்யும் மனம் இல்லாமல், மௌனமாக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

அதற்குப் பதிலாக, எதிர்நிலையாக தனியாருக்கு உயர்கல்வியை வாரி வழங்கும் நிலை ஏன் ஏற்படுகிறது? ஏதோ ஆராய்ச்சி மேம்பாடு, கல்வி மேம்பாடு போன்றவற்றின் காரணமாக இந்த முன்வரைவை வைக்கிறோம் என்று கூறுவது மக்களை ஏமாற்றும் வேலை.

இந்தச் சட்டத் திருத்தம் வருங்கால ஏழை மாணவர்களை கடுமையாக பாதிக்கும். வருங்காலத்தில் உயர்கல்வி ஒரு வியாபார விலைப்பொருளாக மட்டுமே மாறும். இதில், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து கல்லூரிகள் புதிய பல்கலைக்கழகங்களாக செயல்படலாம் என்ற திட்டமும் முன்வைக்கப்படுகிறது.

உள்நாட்டிலேயே தரமான கல்வி வழங்கும் திறமைமிக்கவர்கள் இருக்கும் வேளையில், ஏன் இந்த வியாபார முன்னெடுப்பு? தனியார் மருத்துவக் கல்லூரிகளும் பிற தொழில்கல்வி கல்லூரிகளும் மேலும் வளர்ச்சி அடைந்து தங்கள் வணிகத்தை பெருக்கிக்கொள்ளத்தான் இந்தச் சட்டத் திருத்த முன்வரைவு உதவுவதாகத் தெரிகிறது.

தமிழகத்தின் அனைத்து மக்களும் இதுகுறித்து அக்கறை செலுத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுகிறோம். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கவனத்தை இந்தப் பிரச்சினையின் மீது செலுத்தி, இந்தச் சட்ட முன்வரைவை அரசு திரும்பப் பெற வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என்று தெரிவித்துள்ளனர்.

இந்த மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில், திமுக அரசு பணிந்து, மசோதாவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.