சென்னை:
தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் வசூலித்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகளுக்கான இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், பல தனியார் பள்ளிகள், எப்போதும் போல பள்ளிக் கட்டணம் வசூலித்துக்கொண்டு, ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகிறது.
ஊரங்கு காரணமாக வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலோர் கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். ஆனால், அதை ஏற்றுக்கொள்ளாத தனியார் கல்வி நிறுவனங்கள் பணம் கட்டிய மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், தமிழக பள்ளி பள்ளிக்கல்வித்துறையின் தனியார் பள்ளிகளுக்கான இயக்குநர், எச்சரிக்கை விடுத்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில், தமிழக அரசு பிறப்பித்த அரசாணை விதிமுறைகளை மீறி தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
2019 – 20-க்கான நிலுவைக் கட்டணம், 2020- 21ஆம் கல்வி ஆண்டுக்கான கட்டணங்களை செலுத்ததுமாறு பெற்றோர்களை தனியார் பள்ளிகள் வற்புறுத்தக் கூடாது.
கல்விக் கட்டணம் மட்டும் அல்லாமல், இணையவழியில் கல்வி கற்பிப்பதற்கு என்று கூறி ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் செலுத்த வற்புறுத்தக் கூடாது .
மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.