டெல்லி:

சென்னை உள்பட முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் அதிவேக ரயில்களை தனியார் மயமாக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. அதுபோல சென்னை மற்றும் பல மாநிலங்களின் புறநகர் ரயில் சேவைகளையும் தனியாருக்கு தாரை வார்க்க மோடி அரசு திட்டமிட்டு உள்ளது.

இந்த திட்டம் ஜூன் மாதத்தில் அங்கீகரிக்கப்பட்ட அமைச்சகத்தின் 100 நாட்கள் செயல் திட்டத்தின் ஒரு பகுதி என்று கூறப்பட்டு உள்ளது.

ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் தேஜாஸ் ரயில் இயக்கத்தை தனியாருக்கு தாரை வார்த்தது. அதன்படி,   டெல்லி-லக்னோ மற்றும் அகமதாபாத்-மும்பை இடையே தேஜஸ் எக்ஸ்பிரஸ் பைலட் அடிப்படையில் ரயில்வேயின்,  துணை நிறுவனமான இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனுக்கும் (ஐ.ஆர்.சி.டி.சி) ஒப்புதல் அளித்தது. இந்த ரயில்கள் ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் 12 பெட்டிகளுடன் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் ரயில் சேவைகளையும் தனியாரிடம் ஒப்படைக்க உள்ளத. அதன்படி, டில்லி மும்பை, டில்லி ஜம்மு, காட்ரா, டில்லி – ஹவுரா, செகந்திராபாத் – ஐதராபாத், செகந்திரபாத் – டில்லி, டில்லி – சென்னை, மும்பை – சென்னை, ஹவுரா – சென்னை, ஹவுரா – மும்பை போன்ற வழித்தடங்களை மாற்ற முடிவு செய்துள்ளது.

மேலும் சென்னை, மும்பை, கொல்கத்தா, செகந்திரபாத் புறநகர் ரயில் சேவைகளையும் தனியாருக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு, ரயில்வே அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்.  பயணிகள் ரயில் சேவைகளை தனியாரிடம் ஒப்படைப்பது டெல்லியில் வரும் 27ம் தேதி காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது. ரயில்வேயை தனியாரிடம் ஒப்படைத்து, உலகத்தரம் வாய்ந்த சேவையை அளிப்பது தொடர்பாக ரயில்வேயை தனியார் மயமாக்க 100 நாள் செயல்திட்டம் வகுக்கப்படுகிறது.

இதன்படி, முக்கிய நகரங்கள், வழித்தடங்களில் இயக்கப்படும் பகல் மற்றும் இரவு நேர ரயில்களை, அந்தந்த வழித்தடங்களை ஏலம் எடுத்து தனியார் இயக்கலாம். எந்தெந்த வழித்தடங்களை தனியாரிடம் ஒப்படைக்கலாம் என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.