பெங்களூர்:
பெங்களூர் உட்பட கர்நாடகாவில் செயல்படும் அனைத்து தனியார் நிறுவனங்களில் 100 சதவீதம் கன்னடர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசு சட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு உள்பட இதர மாநில ஊழியர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘கர்நாடக தொழில் வேலை வாய்ப்பு (நிலை உத்தரவு) விதிமுறை 1961’ என்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர கர்நாடக அரசு திட்டமிடடுள்ளது. இதன் மூலம் அங்குள்ள தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பிற மாநில ஊழியர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. 100 சதவீதம் கன்னடர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கும்.
 

இந்த திருத்தத்தில், 5% குறையாத பணியிடங்கள், கன்னட மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்ற ஷரத்தும் சேர்க்கப்பட உள்ளதாக செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அரசிடம், நிலம், நீர், மின்சாரம் அல்லது வரி சலுகை பெறும் அனைத்து தனியார் நிறுவனங்களும் கன்னடர்களுக்கு மட்டுமே வேலை வழங்க வேண்டும் என்று சட்ட திருத்தத்தில் இடம் பெற்றுள்ளது என அரசு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், புதிய தொழில் முனைவோர், அறிவுசார் தொழில் நிறுவனங்களுக்கு இந்த விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதி விலக்கு சட்ட திருத்தம் அமலுக்கு வந்த பிறகு அதிகபட்சமாக 5 வருடங்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும்.
கர்நாடகாவில் பிறந்த அல்லது, கர்நாடகாவில் 15 ஆண்டுகளுக்கு குறையாமல் வசிக்கும் நபர் கன்னடர் என கருதப்படுவர். அந்த நபருக்கு கன்னடம் புரிய, பேச, வாசிக்க, எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.