திருச்சி:
மத்திய அரசு பாதுகாப்பு துறையில் தனியார் முதலீடு செய்ய அனுமதி அளித்துள்ள எதிர்த்து திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதுகாப்புத் துறையில் தனியாரும் பங்கேற்கும் விதமாக முதலீட்டுக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். மேலும், அடுத்த 50 ஆண்டுகளுக்கு பாதுகாப்புத் துறைக்குத் தேவையான ஆயுதங்களை தயாரிக்கும் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.
நாட்டின் உயர்ந்த பாதுகாப்பு துறைக்கு தேவையான தளவாட பொருட்கள் தனியாரிடம் தயாரிக்கப்பட்டால், நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், மத்திய அரசின் பாதுகாப்பு துறைக்கு சொந்தமான திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியஅரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து
3 நாள் வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர்.
பாதுகாப்புத்துறையில் தனியார் முதலீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் ஜன.25 வரை வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.