கடந்த 2 ஆண்டுகளில் ரூ.46 கோடி பிரீமியம் தொகையை ரயில்வே துறையிடம் இருந்து பெற்றுள்ள தனியார் காப்பீடு நிறுவனங்கள், பயணிகளுக்கான இழப்பீடாக வெறும் ரூ. 7 கோடியை மட்டுமே வழங்கியுள்ள தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தை மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலரான சந்திர சேகர் கவுர் என்பவர், “மத்திய ரயில்வே துறையின் கீழ் செயல்படும் IRCTC நிறுவனத்தின் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு ரயில்வே துறை காப்பீடு வழங்குகிறது. இந்த காப்பீட்டை ஸ்ரீராம் ஜெனரல், ஐ.சி.ஐ.சி.ஐ லாம்பார்ட் ஜெனரல், ராயல் சுந்தரம் ஜெனரல் ஆகிய 3 தனியார் நிறுவனங்கள் அளித்து வருகின்றன.

கடந்த 2016ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பயணிகள் காப்பீட்டு திட்டத்தின் கீழ், டிக்கெட் முன்பதிவு செய்து ARC அல்லது டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பயணி ஒருவருக்கு அவரின் டிக்கெட் கட்டணத்தில் காப்பீடுக்காக ரூ. 92 காசுகள் கூடுதலாக, பயணியின் விருப்பத்தின் அடிப்படையில் வசூலிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து ரயிலில் பயணிக்கும் பயணிகள், ரயில் விபத்தில் சிக்கி இறந்தாலோ அல்லது காயம் ஏற்பட்டாலோ அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

அதன்படி, ரயில் விபத்தில் சிக்கி காப்பீடு செய்த பயணி இறக்க நேரிட்டால், அவரின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் காப்பீடு நிறுவனங்களால் வழங்கப்படும். காப்பீடு திட்டத்தில் சேர்ந்த ஒரு பயணி ரயில் விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தாலோ அல்லது உறுப்புகள் ஏதேனும் இழந்தாலோ, அவருக்கு ரூ. 7.5 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும். விபத்தில் லேசான காயம் அடைந்த பயணிக்கு, ரூ. 2 லட்சம் மருத்துவ செலவாக வழங்கப்படும். அத்தோடு, ரயிலில் நடைபெறும் கொள்ளை, வன்முறை, தீ விபத்துக்கள் போன்றவற்றில் பாதிக்கப்படும் பயணிகளுக்கும், காப்பீடு நிறுவனங்கள் மூலம் இழப்பீடு வழங்கப்படுகிறது.

அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளாக எவ்வளவு தொகையை பிரீமியமாக மத்திய ரயில்வே துறை, காப்பீடு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது ?

கடந்த 2 ஆண்டுகளாக காப்பீட்டு நிறுவனங்களால், பயணிகளுக்கு வழங்கப்பட்ட தொகையின் மதிப்பு என்ன ?” என்று கேள்விகளை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய ரயில்வே துறை, “கடந்த 2 ஆண்டுகளில் தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு ரூ. 38.89 கோடியை ரயில்வே துறை பிரீமீயமாக செலுத்தியுள்ளது. அதேநேரம், இழப்பீடாக பயணிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளில் ரூ. 7.29 கோடி மட்டுமே, தனியார் காப்பீடு நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக ரயில்வே துறையில் விபத்துக்குள் கனிசமாக குறைந்துவிட்டன. கடந்த 2013 -14ம் ஆண்டில் 118 ரயில் விபத்துக்கள் நடந்த நிலையில், 2016 – 17ம் ஆண்டில் அது 104 விபத்துக்களாகவும், 2017 – 18ம் ஆண்டில் 73 விபத்துக்களாகவும், 2018 – 19ம் ஆண்டில் 59 விபத்துக்களாகவும் படிப்படியாக குறைந்துவிட்டது. இதனால் இழப்பீடு வழங்கும் அளவும் குறைந்துவிட்டது” என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.