ஆளும் கர்நாடக கூட்டணி ஆரசுக்கு ஆதரவு: பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏவுக்கு மாயவதி உத்தரவு

Must read

ஆளும் கர்நாடக மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் படி, பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏவுக்கு மாயாவதி உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் கூட்டணி அரசில் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக, காங்கிரஸை சேர்ந்த 12 எம்.எல்.ஏக்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏக்களும், தங்களின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தனர். இது தொடர்பாக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்த எம்.எல்.ஏக்கள், அதை ஏற்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தனர். இதன் காரணமாக, எம்.எல்.ஏக்கள் கொடுத்த கடிதத்தின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும் படி சபாநாயகருக்கு, உச்சநீதிமன்றம் அறிவுருத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை கர்நாடக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டது. அதில் 26 எம்.எல்.ஏக்கள் தாங்கள் பேச வாய்ப்பு வழங்கும் படி வலியுறுத்தியதால், சபாநாயகர் அவர்களுக்கு அனுமதி அளித்தார். இதனால் வெள்ளிக்கிழமை அன்று நம்பிக்கை தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்படவில்லை. இதன் காரணமாக விரக்தி அடைந்த பாஜக எம்.எல்.ஏக்கள், ஆளுநரிடம் முறையிட்டனர்.

சனிக்கிழமை பகல் 1.30 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டும், எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து பேசி வந்ததால் 6.30 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் பேசியதால், திங்கட்கிழமைக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது.

இத்தகைய சூழலில், இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்த பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ மகேஷ், “நான் வேறு பணிகளில் உள்ளேன். அதனால் சபை நடவடிக்கைகளில் பங்கேற்க இயலவில்லை. எங்களுடைய தலைமை என்னை நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்கும் படி உத்தரவிட்டுள்ளது. அதன் காரணமாக நான் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளப்போவது இல்லை” என்று அறிவித்திருந்தார்.

மகேஷ் இத்தகைய அறிவிப்பை செய்தியாளர்களிடம் தெரிவித்த சில மணி நேரங்களில் டுவிட்டரில் பதிவு ஒன்றை மாயாவதி மேற்கொண்டிருந்தார். அதில், “கர்நாடக பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏவுக்கு, ஆளும் கர்நாடக அரசுக்கு ஆதரவும், முதல்வர் குமாரசாமிக்கு ஆதரவாகவும் வாக்களிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் ஆளும் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் 103 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தற்போது ஆளும் அரசுக்கு கிடைத்திருக்கிறது. 105 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தால், ஆட்சியை தொடர முடியும் என்கிற நிலையில், மேலும் 2 எம்.எல்.ஏக்களை மீண்டும் தங்கள் பக்கம் கொண்டுவர காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் மேலும் ஒருநாள் வாக்கெடுப்பு நடத்தப்படாமல், தள்ளிப்போகலாம் என்று கூறப்படுகிறது.

More articles

Latest article