சென்னை:
எனது பரோலை தடுக்க சிறைஅதிகாரிகள், தான் செல்போன் பயன்படுத்தியதாக பொய் சொல்கிறார்கள் என்று ராஜீவ் கொலை வழக்கு கைதி முருகன் ஆவேசமாக கூறினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
கணவன்-மனைவி இருவரும் சுமார் 27 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வருகின்றனர். கோர்ட்டு உத்தரவின்படி நளினி-முருகன் சந்திப்பு 15 நாட்களுக்கு ஒருமுறை நடந்து வருகிறது. இதற்கிடையில், முருகனின் சிறை அறையில் செல்போன் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து, அவருக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகளை ரத்து செய்ய ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் முருகன் பரோல் கேட்டு தொடர்ந்த வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றம் வந்தவர், நீதிமன்ற வளாகத்தில், நான் செல்போன் பயன்படுத்தவில்லை, சிறை அதிகாரிகள் வேண்டுமென்றே எனது விடுதலை & பரோலை தடுப்பதற்காக திட்டமிட்டு சதி செய்கிறார்கள் என்று ஆவேசமாக கூறினார்.
மேலும், தனக்கு சிறையில் சரிவர உணவு தருவதில்லை என்றும், எனது ஆன்மீக பயணத்தையும் காவலர்கள் தடுக்க நினைக்கிறார்கள் என்றும் கூறினார். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.