சென்னை: வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் தடையின்றி வாக்களிக்க ஏதுவாக, வாக்குச்சாவடிகளில் நிரந்தர சாய்வுதளங்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் உறுதி செய்யுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பாக ஆகஸ்ட் 3, 2023 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட வழிகாட்டுதல்களை மிகக் கடுமையாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பான விரிவான அறிக்கையை 2026 ஜனவரி கடைசி வாரத்திற்குள் தாக்கல் செய்ய தமிழகம் மற்றும் புதுச்சேரி தலைமைச் செயலாளர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் விவரம்:
.ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக மாற்றுத்திறனாளிகளைக் கண்டறிந்து, அவர்களின் குறைபாடுகளுக்கு ஏற்ப தரவுத்தளத்தை அதிகாரிகள் தயார் செய்ய வேண்டும்.
வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட வேண்டும். அவர்கள் வரிசையில் நிற்காமல் முன்னுரிமை அடிப்படையில் வாக்களிக்க வசதி செய்யப்பட வேண்டும்.
அனைத்து வாக்குச்சாவடிகளும் தரைத்தளத்திலேயே அமைய வேண்டும். சரியான சாலை வசதி, வாகன நிறுத்துமிடம் மற்றும் சக்கர நாற்காலிகள் தடையின்றி செல்வதற்கான இடவசதி இருக்க வேண்டும்.
வாக்குச்சாவடிகளில் தற்காலிகமாக மரப்பலகைகளை வைத்து சாய்வுதளங்களை உருவாக்குவதை நீதிமன்றம் ஏற்கவில்லை. அதற்கு பதிலாக, 1:12 என்ற விகித அளவில் நிரந்தரமான சிமெண்ட் சாய்வுதளங்கள் பொதுக் கட்டிடங்களில் அமைக்கப்பட வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் இணையதளங்கள் மற்றும் செயலிகள் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் (Universally Accessible) உள்ளதா என்பதை ஆய்வு செய்ய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த வழிகாட்டுதல்கள் அனைத்தும் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்யத் தவறும் பட்சத்தில் அரசு அதிகாரிகள் அதற்குப் பொறுப்பேற்க நேரிடும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]