இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசி டயானா திருமணத்தில் வழங்கப்பட்ட ‘கேக்’ துண்டு ஒன்று 1850 பவுண்டுகளுக்கு ஏலம் போனது.

1981 ம் ஆண்டு ஜூலை மாதம் 29 ம் தேதி லண்டனில் உள்ள செயின்ட் பால்ஸ் தேவாலயத்தில் டயானாவும் இளவரசர் சார்லசும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

வெகு விமரிசையாக நடைபெற்ற இந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்குவதற்கு என்று பல்வேறு இடங்களில் இருந்து 23 கேக்குகள் வரவழைக்கப்பட்டு வழங்கப்பட்டது.

அதில், இங்கிலாந்து ராணியின் அரண்மனையில் பணிபுரிந்த மோயா ஸ்மித் என்பவருக்கு வழங்கப்பட்ட கேக் துண்டை பேப்பரில் சுருட்டி பத்திரப்படுத்தி வைத்திருந்தார்.

ஒரு மெல்லிய கண்ணாடி இழை போன்ற பேப்பரில் மூடி வைத்த இந்த கேக் 40 வருடம் ஆன நிலையிலும் தயாரிக்கப்பட்ட அன்று எப்படி இருந்ததோ அதே போன்று இருந்தது.

40 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட இந்த கேக்கை “சாப்பிடமட்டும் கூடாது” என்ற நிபந்தனையுடன் ஏலத்தில் விட அறிவிப்பு வெளியாகியது, இதனை வாங்க அமெரிக்கா, இங்கிலாந்து, அரபு நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு இடங்களில் இருந்து பலரும் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு பலரும் ஏலம் எடுக்க ஆர்வம் காட்டினர்.

ஜெர்ரி லேடன் என்பவர் இதை இந்திய மதிப்பில் ரூபாய் 1,90,000 க்கு ஏலம் எடுத்தார். இதை தனது அறக்கட்டளையில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்க இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

இந்த கேக் 30,000 ரூபாயில் இருந்து 50,000 ரூபாய் வரை விலை போகும் என்று எதிர்பார்த்த ஏல நிறுவனத்திற்கு சுமார் நான்கு மடங்கு அதிக விலை கிடைத்தது அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

1981 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட டயானா 1992 ம் ஆண்டு முதல் இளவரசர் சார்லசிடம் இருந்து பிரிந்து வாழ்ந்த நிலையில், 1996 ம் ஆண்டு விவாகரத்துப் பெற்றார்.

விவாகரத்துப் பெற்ற ஓராண்டில் 1997 ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடந்த சாலை விபத்தில் இறந்தது அப்போது உலகையே உலுக்கியது.