இந்தியாவை 5 டிரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதாரமாக மாற்றுவதே பிரதமரின் இலக்கு என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு சா்வதேச மாநாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை 4 நாள் கட்டுமான உபகரணக்காட்சியை தொடக்கி வைத்து, அத்துறை சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகள், சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். பின்னர் பேசிய நிதின் கட்காரி, “இந்தியாவை 5 டிரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதாரமாக மாற்றுவதே பிரதமரின் இலக்கை அடைய ரூ .100 லட்சம் கோடி மதிப்புள்ள முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நெடுஞ்சாலைத் துறையின் வளா்ச்சிக்கு மட்டும் இந்த ஆண்டு ரூ. 2 லட்சம் கோடி நிதியை ஒடுக்க முடிவு செய்துள்ளோம். அடுத்த ஆண்டின் இதற்கான நிதி ஒதுக்கீடு ரூ .3 லட்சம் கோடியாக அதிகரிக்கும். அடுத்த 5 ஆண்டுகளில், சாலை உள்கட்டமைப்பிற்காக மொத்த ரூ .17 லட்சம் கோடி வரை செலவு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

கட்டுமானத் துறையில் உள்ள தனியாா்கள் இயந்திரமயமாக்கல், மேம்பட்ட தொழில்நுட்பங்களில் சா்வதேச அளவில் உள்ள சிறந்த நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். உயிரி எரிபொருட்களின் பயன்பாடு மற்றும் கழிவுப்பொருள்களை கட்டுமானத் திட்டங்களுக்கு மூலப்பொருட்களாகப் பயன்படுத்துவதில் புகவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் கட்டுமான செலவுகள் மட்டுமின்றி மாசுவையும் குறைக்க முடியும்” என்று தெரிவித்தார்.