டெல்லி:  நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு ராணுவ விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட 8 சிறுத்தைகளை பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்குள் விடுவித்தார். சுமார் 74 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் மீண்டும் சிறுத்தைகள் வசிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சத்தீஸ்கரில் மாநிலத்தின் கொரியா மாவட்டத்தில் நடமாடி வந்த சிறுத்தைகள் படிப்படியாக அழிந்துவந்தது. 1947ம் ஆண்டு கடைசி சிறுத்தையும் உயிரிழந்தது. இதையொட்டி, 1952ம் ஆண்டு  இந்தியாவில் சிறுத்தைகள் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, 74 ஆண்டுகள் ஆகும் நிலையில்,  மீண்டும் சிறுத்தைகளை இந்தியாவில் வசிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

இதையடுத்து,  ‘ஆப்பிரிக்க சிறுத்தை அறிமுகம் திட்டம்’ 2009 இல் உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் சிறுத்தைகளை இந்த பூங்காவில் அறிமுகப்படுத்தும் திட்டம் இருந்தது ஆனால், கோவிட்-19 தொற்றுநோயால் அந்த திட்டம் தள்ளிப்போய் தற்போது செயல்படுத்தப் படுகிறது.

முன்னதாக நாடுகளுக்கு இடையேயான இடமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக செப்டம்பர் 17ந்தேதி அன்று ஆப்பிரிக்காவின் நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகள் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக இருநாடுகளுக்கு இடையே உடன்பாடுகள் ஏற்பட்டு, நமிபியாவில் இருந்து சிறுத்தை அழைத்து வரும் முயற்சி தொடங்கியது.

புராஜக்ட் சீட்டா (‘Project Cheetah’) என்ற பெயரில் அதற்கான திட்டம் தீட்டப்பட்டது. அதன்படி, நமிபியாவில் இருந்து, 8 சிறுத்தைகளை  ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு சரக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்டு, அதே நாளில் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள குனோ-பால்பூர் தேசிய பூங்காவிற்குள் (KPNP) விடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சி பிரதமர் மோடி பிறந்தநாளான செப்டம்பர் 17ந்தேதி நடைபெறும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டது.

இந்தியாவில் இந்த சிறுத்தைகள் அழிந்து 74 ஆண்டுகளுக்கு பிறகு, சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி இந்த மூன்று சிறுத்தைகளை தனது பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று மத்திய பிரதேச  பூங்காவின் தனிமைப்படுத்தப்பட்ட அடைப்புகளில் விடுவிப்பார். அதனை தொடர்ந்து இத்திட்டம் மூலமாக இந்தியாவில் சிறுத்தைகள் இனம் மீண்டும் வளரத் துவங்கும் என்று கூறப்படுகிறது.

அதற்கு ஏற்றார்போல நமீபியாவின் தலைநகர் வின்ட்ஹோக்கிலிருந்து விமானத்தில் சிறுத்தைகள் ஏற்றப்பட்டது. சுமார் விமானம் 16 மணி நேரம் 40 நிமிடங்கள் பணத்தற்கு பிறகு சிறுத்தைகள் இந்தியா வந்தடைந்தது.  இந்த சிறுத்தைகளை சரக்கு விமானத்தில் இருந்து   ஹெலிகாப்டருக்கு மாற்றிய பின்னர், மற்ற சம்பிரதாயங்களை முடித்த பிறகு, விலங்குகள் ஒரு மணி நேர பயணத்திற்குப் பிறகு குனோ-பால்பூரில் உள்ள ஹெலிபேடுகளை அடையும் என்று கூறப்பட்டது.

அதன்படி, சிறுத்தைகள் இன்று காலை மத்தியபிரதேச மாநில தேசிய பூங்காவுக்கு எடுத்துவரப்பட்டது. அங்கு பிரதமர் மோடி சிறுத்தைகளை கூண்டுகளில் இருந்து விடுத்தார்.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ‘திட்டம் சீட்டா’ என்பது சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புக்கான அரசின் முயற்சி என குறிப்பிட்டுள்ளார்.

இந்த  சிறுத்தைகள் முதலில் ஒரு மாதத்திற்கு சிறிய அடைப்புகளிலும், பின்னர் பெரியவற்றிலும் மாற்றப்பட உள்ளதாகவும், ஓரிரு மாதங்கள் பழகுவதற்கும் சுற்றுப்புறங்களை நன்கு அறிந்து கொள்வதற்காகவும் வைக்கப்பட்டு பின்னர், வனப்பகுதியில் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.