சென்னை: தேர்தலுக்குப் பின் மோடி நாட்டை விட்டு வெளியேறி ஆப்பிரிக்காவில் குடியேறுவார் என காங்கிரஸ் எம்எல்ஏ, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் ஈ.வெ.கி.சம்பத்தின் 98-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஈவிகே சம்பத்  திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், எம்எல்ஏவுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் கோபண்ணா மற்றும் முன்னாள் தலைவர்கள், கட்சி தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பிரதமர் நரேந்திர மோடி அடுத்த முறை தமிழ்நாடு வரும் போதும் தமிழர்களின் வரவேற்பு வேறு விதமாக இருக்கும். காங்கிரஸ் தான் திமுக, திமுகதான் காங்கிரஸ். மோடியை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதில் ஒற்றை கருத்து கொண்ட கட்சியாக இந்த இரு கட்சியினரும் உள்ளோம். வரும் தேர்தலுக்கு பின் பிரதமர் மோடி நாட்டை விட்டு வெளியேறி ஆப்பிரிக்காவில் குடியேறுவார் என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் கூறியவர்,  தி முக கூட்டணியில் 5 முறை தேர்தலை சந்தித்து வருகிறோம். திமுகவினர் காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப தொகுதிகள் பிரித்துக் கொடுத்து வருகின்றனர். காமராஜர் காலத்தில் இருந்த காங்கிரஸ் தற்போது இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தொகுதிகள் குறைக்கப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது உண்மையில்லை” என தெரிவித்தார்.