சென்னை: தேசிய தலைவர் பசும்பொன் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு வரும், 30ந்தேதி பிரதமர் மோடி பசும்பொன் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்றைய தினம் பசும்பொன் சென்று, தேவர் சமாதியில் மரியாதை செய்வார் என்று கூறப்படுகிறது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை வரும் 30ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடக்கிறது. அவர் பிறந்த ஊரான, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அவரது சமாதியில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, மறைந்த முத்து ராமலிங்கத்தேவருக்கு மரியாதை செலுத்த இருப்பதாக மாநில பாஜகவினர் கூறி வருகின்றனர்.
இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் சென்றுள்ளதாகவும், அதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர், காவல் அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தேவர் ஜெயந்தியில் கலந்துகொள்ள பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்து, அதன் பின்னர் கார் மூலம் கோரிபாளயத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த இருப்பதாகவும், அதைத்தொடர்ந்து, முத்துராமலிங்க தேவர் பிறந்த ஊரான பசும்பொன்னிற்கு சென்று மரியாதை செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக பாஜகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.