கொழும்பு: பிரதமர் மோடி இலங்கை சென்றுள்ள நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.
பிரதமர் மோடி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில்நடைபெற்ற ‘பிம்ஸ்டெக்’ மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, பின்னர் விமானம் மூலம் இலங்கை சென்றார். நேற்று இரவு இலங்கை தலைநகர் கொழும்பு விமான நிலையத்தில்தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு இலங்கை சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கையின் மூத்த அமைச்சர்கள் அடங்கிய குழு பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்றது.
இலங்கையில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். குறிப்பாக, இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகாவை இன்று (ஏப்.5) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை விரிவாக்குவது குறித்து அவர்கள் விவாதிக்க உள்ளனர். பேச்சுவார்த்தை யின் முடிவில் இந்தியா – இலங்கை இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கைெயழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இரு நாடுகளுக்கு இடையே முதல் முறையாக ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.
இலங்கையில் அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, கொழும்புக்கு வருகை தந்துள்ளேன். விமான நிலையத்தில் என்னை வரவேற்ற அமைச்சர்கள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் அனைவருக்கும் எனது நன்றி. இலங்கையில் பங்கேற்கவுள்ள நிகழ்வுகள் குறித்து ஆவலுடன் உள்ளேன். அத்துடன் சமூக வரவேற்பின்போது மகாபுருஷர் ஶ்ரீமந்த சங்கரதேவ், ஸ்ரீ ஸ்ரீ மாதப்தேவ் ஆகியோரின் சிந்தனைகளின் மொழிபெயர்ப்புகள் இசை தொடர்பான நூல்கள், இந்தியக் கதைகள் மற்றும் பாளி மொழியிலான கீத கோவிந்தத்தின் சில அத்தியாயங்கள் ஆகியவற்றையும் பார்வையிட முடிந்தது.
இந்த கலாசார பிணைப்புகள் எப்போதும் செழிக்கட்டும்! சுந்தர காண்டத்தின் சில பகுதிகளை பிரதி பலித்த பொம்மலாட்டதினை இங்கு காண முடிந்தது. நளின் கம்வாரி மற்றும் ஸ்ரீ அநுர பொம்மலாட்ட கழகத்தினருக்கு அவர்களது ஆர்வம் மற்றும் ஆற்றலுக்காக எனது பாராட்டுகள். கொழும்பிலுள்ள இந்திய சமூகத்தினர் எனக்கு வழங்கிய ரம்மியமான வரவேற்புக்கு மழை கூட தடையாக இருக்கவில்லை. அவர்களது அன்பான அரவணைப்பு மற்றும் உற்சாகத்தினால் நான் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு எனது நன்றி” என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இலங்கை அரசு தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி இலங்கை கடற்படையினால் எல்லை தாண்டி மீன்பிடித்தாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர். அந்த மாணவர்களை தற்போது, எந்தவித நிபந்தனையும் இன்றி ஊர் காவல்துறை நீதிமன்ற நீதிபதி நளினி சுபாஸ்கரன் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
விடுதலை செய்யப்பட்ட 11 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தை முன்னிட்டு மீன்வளத் துறையினர் தாமாக முன்வந்து ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.