சென்னை: வரும் 19ந்தேதி பிரதமர் மோடி கோவை வர இருக்கிறார். இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் சங்கங்களால் கோவையில் நடத்தப்படும் 25வது தென்னிந்திய இயற்கை வேளாண்மை உச்சி மாநாட்டில் உரையாற்றுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19 ஆம் தேதி கோவைக்கு வருகை தருகிறார். இது இயற்கை வேளாண் நிபுணர் மறைந்த ஜி. நம்மாழ்வார் பரப்பிய விவசாய முறைகளை முன்னெடுத்துச் செல்லும் என்று நம்பப்படுகிறது.

கோவை கொடிசியாவில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயம் குறித்த (South India Natural Farming Summit 25) மாநாடு நடக்கிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்க கோவை வருகை தருகிறார். அவரை வரவேற்க பாஜக மற்றும்அதிமுகவினர் தயாராக உள்ள நிலையில், காவல்துறையினரும் தேவையான முன்னேற்பாLகளை செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, கர்நாடக மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலமாக கோவை வருகிறார். அங்கு கொடிசியா மைதானத்தில் நடைபெறும், இயற்கை விவசாய மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த 5 ஆயிரம் இயற்கை விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். மேலும் 50 இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.
இந்த உச்சிமாநாட்டின் சிறப்பம்சங்களில் 300 கண்காட்சி அரங்குகள், புகழ்பெற்ற விஞ்ஞானிகள்/கொள்கை வகுப்பாளர்களின் ஊடாடும் அமர்வுகள், நேரடி செயல்விளக்கங்கள் மற்றும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஈடுபாட்டை மையமாகக் கொண்டது ஆகியவை அடங்கும்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள் தலைமையில் மாநிலம் முழுவதும் ஆறு பிராந்திய வாரியான கூட்டங்கள் நடத்தப்பட்டன, விவசாயிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் நிபுணர்களின் பல்வேறு கண்ணோட்டங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு, பிராந்திய தேவைகள் மற்றும் வேளாண்-காலநிலை மாறுபாடுகள் பற்றிய விரிவான புரிதலை இந்த உச்சி மாநாடு சாத்தியமாக்கியது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாரதீய பிரகிருதிக் கிரிஷி பாடி (பிபிகேபி) மற்றும் பரம்பரகட் க்ரிஷி விகாஸ் யோஜனா (பிகேவிஒய்) உள்ளிட்ட தேசிய முன்முயற்சிகளால் தொகுக்கப்பட்ட நிகழ்வு முற்றிலும் அரசியலற்றதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடி வருகையால் பா.ஜ.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர் கோவைக்கு வரும் பிரதமருக்கு பா.ஜ.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட பா.ஜ.கவினர் செய்து வருகின்றனர்.
பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் கொடிசியா பகுதி முழுவதையும் போலீசார் விரைவில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பாதுகாப்பு ஏற்பாட்டை பலப்படுத்த உள்ளனர். மேலும் பிரதமர் மோடி வந்து செல்லும் பாதைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட உள்ளது.