சென்னை: தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே பிரதமர் மோடி யாருக்கும் வாழ்த்து கூறக்கூடாது என அறிவுறுத்தக்கோரி, இந்திய தேர்தல் ஆணையத்திடம் திமுக எம்.பி. மனு கொடுத்துள்ளார்.
தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. பல கட்டங்களாக நடைபெற உள்ள இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெற இருக்கிறது.
ஏற்கனவே நடைபெற்று முடிந்த  பல தேர்தல்களின்போது, வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிக்காப்படாமல், வாக்கு எண்ணிக்கை  நடைபெற்று கொண்டிருக்கும்போது, பிரதமர் குறிப்பிட்ட நபருக்கு வாழ்த்துதெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால், சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. பிரதமரின் வாழ்த்து காரணமாக, சம்பந்தப்பட்ட நபரின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்ற மறைமுக மிரட்டல் தேர்தல் அதிகாரிகளுக்கு  விடுக்கப்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதன் காரணமாக, தமிழக சட்டமன்ற தேர்தலின்போது, அதுபோல எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் தெளிவாக உள்ள திமுக,  கட்சி எம்.பி. மூலம் தேர்தல் ஆணையத்துக்கு மனு  கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக திமுக எம்பி கலாநிதி வீராசாமி அதற்கான மனுவை அளித்துள்ளார்.அதில்,  தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே பிரதமர் மோடி யாருக்கும் வாழ்த்து கூறாமல் இருக்க அவருக்கு அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.