சென்னை: பிரதமர் மோடி நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வகையில் இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு கோவை சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அங்கு மறைந்த எம்எல்ஏ கோவை தங்கம் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினார்.
பிரதமர் பங்கேற்கும் காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உள்பட, ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்றார். அங்கு சென்ற முதல்வரும் திமுகவினர் பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர்.
இதையடுத்து, கடந்த அக்டோபர் 12ம் தேதி காலமான மறைந்த வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் வீடு அமைந்துள்ள கோவை சாய்பாபா காலனியில் உள்ள வீட்டுக்கு நேரில் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு கோவை தங்கத்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
இதையடுத்து, நாளை கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட தடா கோவில் பகுதியில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குகிறார். தொடர்ந்து அங்கு இருந்து புறப்படும் முக ஸ்டாலின், திண்டுக்கல் செல்கிறார்.
நாளை மாலை திண்டுக்கல் மதுரை சாலையில் சின்னாளப்பட்டி அருகே உள்ள காந்திகிராமிய பல்கலைக்கழக 36 வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
இந்த விழாவில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராக பங்கேற்று, மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிகறார்.
திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழா மற்றும் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில், பிரதமர் மோடி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்ற உள்ளார். இந்த பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி,தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இதையடுத்து பிரதமரின் விமானம் தரையிறங்கும், மதுரை விமான நிலையத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விமான நிலைய வளாகத்தில் தீவிர கண்காணிப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.திண்டுக்கல் நகர் முழுவதும் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் வாயிலாக பிரதமர் பயணம் செய்யும் இருக்கும் நிலையில் ,திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில்,ஹெலிகாப்டரை தரை இறங்கி இன்று பரிசோதனை செய்யப்பட்டது.