சென்னை: வட மாவட்டங்களை புரட்டிப்போட்டுள்ள ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து, பிரதமர் மோடி முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்  என தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி  இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கேட்டறிந்த தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக,  வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் கடந்த சனிக்கிழமை மரக்காணம் அருகே கரையைக் கடந்தது.இதனால், விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட மரக்காணம், விக்கிரவாண்டி, விழுப்புரம் பகுதிகளை திங்கள்கிழமை நேரில் சென்று பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், வெள்ள பாதிப்பு நிவாரணம் நிதி கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

அவரது கடிதத்தில்,  ஃபென்ஜால் புயல் காரணதமாக தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் இதுவரை கண்டிராத அளவில்  பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புயல் தாக்கத்தால் சுமார்  65 லட்சம் குடும்பங்கள் மற்றும் 1.5 கோடி பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புயலால் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்க இடைக்கால நிவாரண நிதியாக ரூ. 2,475 கோடி தேவைப்படுகிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை தொலைப்பேசியில் தொடர்புகொண்ட பிரதமர் மோடி, வெள்ள பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். தமிழக அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், ஆதரவையும் மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.