சென்னை: புத்தாண்டின் முதல்நிகழ்ச்சியாக தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி, 2வதுமுறையாக மீண்டும் தமிழ்நாடு வருகிறார்.
பிரதமர் மோடி ஜனவரி 2ந்தேதி தமிழ்நாடு வருகை தந்தார். அப்போது , திருச்சியில் ரூ.1,112 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள விமான நிலைய புதிய முனையத்தின் திறப்பு விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றதுடன், திருச்சி என்ஐடியில் ரூ.41 கோடியில் 1.2 லட்சம் சதுரடியில் 506 மாணவர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள ‘அமெதிஸ்ட்’ விடுதி, சேலம் – மேக்னசைட் சந்திப்பு – மேட்டூர் அணைப் பிரிவில் 41.4 கிமீ இரட்டை ரயில் பாதை திட்டம், மதுரை – தூத்துக்குடி 160 கிமீ இரட்டை ரயில் பாதை, திருச்சி – மானாமதுரை- விருதுநகர், விருதுநகர் – தென்காசி, செங்கோட்டை- தென்காசி, திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில் பாதைகள் மின் மயமாக்கம் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் 19 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி, திருப்பூர் மாவட்டத்தில் இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்டப்பட்டு வரும் நிலையில், இந்த மருத்துவமனையை திறந்து வைப்பதுடன், திருப்பூரில் நடைபெறவுள்ள பாஜக பொதுக்கூட்டத்திலும் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.