அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் 36000 க்கும் மேற்பட்ட கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதற்கான அர்ச்சகர் பயிற்சி தொடங்கப்படும் என்றும் அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவித்தார்.
முதல் கட்டமாக 100 நாட்களில் 200 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டும், இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மகளிருக்கும் பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ள அவர், 70 முதல் 100 பேர் அடங்கியவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும் முக்கிய கோயில்கள் 47 லும் அதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்படுவதோடு, அர்ச்சனை செய்யும் பூசாரியின் விவரம் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்படும் என்றும் கூறினார்.
இதுகுறித்து, கடந்த சிலநாட்களாக வட இந்திய ஊடகங்களில் இந்த திட்டத்திற்கு தமிழக பா.ஜ.க. வினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு பா.ஜ.க. நெருக்கடியை கொடுத்து வருவது போன்றும் அந்த பத்திரிக்கைகள் பலவாறாக எழுதிவருகின்றன.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு முட்டுக்கட்டை போடும்வகையில் தமிழக பா.ஜ.க.வினரை அரசுக்கு எதிராக கொம்பு சீவிவிடும் வேலையில் வட இந்திய ஊடகங்கள் மூலமாக ஒரு சிலர் ஈடுபட்டு வருவது இதன்மூலம் தெரியவந்திருக்கிறது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க இந்தவாரம் டெல்லி செல்ல இருக்கும் நிலையில் இவ்வாறு செய்திகள் வெளியாவது பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.
1970 ல் ‘வைக்கம் வீரர்’ தந்தை பெரியார் முன்வைத்த அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று கருணாநிதி தலைமையிலான அரசு அப்போது இதற்கு உத்தரவளித்தது.
இதை எதிர்த்து 1972 ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டது, பின் 1982 ம் ஆண்டு எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. அரசு நீதிபதி மகாராஜன் தலைமையில் கமிட்டி ஒன்றை அமைத்தது.
25 ஆண்டுகள் கழிந்த நிலையில், 2006 ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் இது தொடர்பான உத்தரவை பிறப்பித்தார், மேலும் 2007 ம் ஆண்டு 206 பேருக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது. 2011 ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் இந்த திட்டத்திற்கு மூடு விழா நடத்தப்பட்டது.
பத்தாண்டு கால அம்மா ஆட்சி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து முடக்கப்பட்ட பழைய திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவதில் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கும் அரசு முனைப்புக்காட்டி வருகிறது.
இதனை முடக்கும் விதமாக, சைவ நெறியை கடைபிடிக்கக்கூடியவர்கள் வைணவ கோயில்களில் எப்படி அர்ச்சனை செய்ய முடியும் என்று இந்துமதத்தில் உள்ள சைவ வைணவ பிரிவினரிடையே கருத்து வேறுபாடு நிலவுவது போல் அந்த ஊடகங்கள் மூலம் இப்போது காட்சிப்படுத்தி வருகின்றனர் அதோடு தமிழக பா.ஜ.க. வினரையும் வட இந்திய ஊடகங்கள் மூலம் நூல் கொண்டு ஆட்டுவித்து வருகின்றனர்.