நாமக்கல்:

பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில், பகவானுக்கு மாலை சாற்றும்போது தவறி‌ விழுந்த அர்ச்சகர் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கலில் சுமார் 18 அடி உயரம் உள்ள சக்தி வாய்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில்உள்ளது.  கூப்பிய கைகளுடன்,  இடுப்பில் கத்தியுடனும் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் இந்த ஆஞ்சநேயர் மிகவும் பிரசித்தி பெற்றவர். அவரை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இங்குள்ள ஆஞ்சநேயருக்கு வெற்றிலை  மாலை சாத்துதல், எலுமிச்சம் பழம் மாலை சாத்துதல், துளசி மாலை சாத்துதல், வடை மாலை  சாத்துதல், பூ மாலை சாத்துதல் ஆகியவை நேர்த்திக் கடனாக செலுத்தப்படுகின்றன.  தவிர  வெண்ணெய் காப்பு போன்ற சிறப்பு அபிஷேகங்களும் இங்கு செய்யப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று ஆஞ்சநேயருக்கு மாலை சாத்துதல் நடைபெற்றது. அப்போது கீழே இருந்து ஒரு அர்ச்சகர் மேலே உள்ள அர்ச்சகரிடம் சுவாமிக்கு மாலை அணிவிக்க மலர் மாலைகளை  கொடுத்து வருகிறார். அதை பெற்றுக்கொண்டவர் சுவாமிக்கு மலர்மாலைகளை அணிவித்து விட்டு திரும்பியபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.

இதன் காரணமாக பலத்த காயம் அடைந்த அந்த அர்ச்சகர் உடடினயாக அருகில் உள்ள மருத்துவ மனையில்  முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அர்ச்சகர் தவறி விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.