சென்னை: பொது விநியோக திட்டம் சிறப்பாக செயல்படுவதால் தமிழ்நாட்டில் விலைவாசி மற்ற மாநிலங்களை விட குறைவாக இருப்பதாக மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் கூறியுள்ளார்.
இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் விலைவாசி கட்டுக்குள் இருப்பதாகவும், குறைவாக இருப்பதாகவும், ஆய்வு அறிக்கைகள் தெரிவித்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிம் பேசிய மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் உணவு சம்மந்தமான பொருட்கள் மீதான விலையேற்றம் மிகவும் குறைவாக இருக்கிறது. வட இந்தியா உள்ளிட்ட நாடு முழுவதும் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் விலைவாசி ஏற்றம் என்பது குறைவாக உள்ளது. இந்திய அளவில் உணவு பொருட்களின் மீதான விலைவாசி ஏற்றம் 7.6 சதவீதமாக உள்ளது.
இதனை ஒப்பிட்டு பார்க்கும்போது ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா 5% க்கும் கீழ் இருக்கிறது.
இதற்கு காரணம் தென் மாநிலங்களில் வலுவான பொது விநியோக திட்டம் செய்லபடுத்தப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக வலுவான பொது விநியோக திட்டத்தால் உணவு, தானியங்கள் மற்றும் காய்கறிகளின் விலையேற்றம் தமிழ்நாட்டில் மிகவும் குறைவாக உள்ளது என கூறினார்.