சென்னை: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரி, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வையும்; அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதையும் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும்; இவைகளையெல்லாம் கண்டும் காணாமல் இருந்து வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இன்று காலை 10 மணியளவில்,வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; கழகம் மற்றும் சார்பு அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கட்சி தொண்டர்களும் கலந்து கொள்கின்றனர்.