பழனி
கடந்த அதிமுக ஆட்சியால் பழனி கோவில் இரண்டாம் ரோப் கார் திட்டம் காலதாமதம் ஆகி உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறி உள்ளார்.
தமிழகத்தில் பழனி முருகன் கோவில் மிகவும் புகழ்பெற்ற ஒரு ஆலயமாகும். முருகக் கடவுளின் ஆறு படை வீடுகளில் ஒன்றான பழனிமலைக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வருவது வழக்கமாகும். இந்த மலையில் ஏற முடியாதோர் குறிப்பாக சில முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள் ஆகியோருக்கு ரோப்கார் இயங்கி வருகிறது.
ஆனால் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் இந்த வசதி பலருக்குக் கிடைப்பதில்லை. எனவே இங்கு பக்தர்களின் வசதிக்காக இரண்டாம் ரோப்கார் திட்டம் தொடங்கப்பட்டு அது பாதியிலேயே நின்று உள்ளது. தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று பழனிக்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்டார். மேலும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் சேகர்பாபு, “திருப்பதியைப் போல் பழனியைத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் பழனி கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும். இரண்டாம் ரோப்கார் பணிஅயி விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் கால தாமதம் ஆனதற்குக் கடந்த அதிமுக ஆட்சியே காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.