சென்னை:
ஜிகா, டெங்கு வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், உள்ளாட்சி அதிகாரிகளுக்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன் அடிப்படையில் சுகாதாரத்துறை பணியாளர்கள், வீடு, வீடாக சென்று சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், பேருந்து நிலையங்கள், மூடப்படாத கால்வாய்கள், தேங்கியிருக்கும் நீர், பழைய டயர், ட்ரம் உள்ளிட்ட பொருட்களை உடனடியாக தூய்மைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை தங்கள் பகுதிக்கு உட்பட்டவற்றில் உடனடியாக தூய்மைப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் ஜிகாவோ, டெங்குவோ வரும் வரை காத்திருக்காமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்தம், படுக்கைகள், மருந்துகள் ஆகியவற்றின் இருப்பை உறுதிப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அலுவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.