டெல்லி: பாலகோட் தாக்குதல் ஹீரோ – தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதை குடியரசு தலைவர் வழங்கினார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த விமானப்படை வீரர் அபிநந்தன், இந்திய விமானப்படையில் விங் கமாண்டராக பணியாற்றி வந்தார். பாலகோட் தாக்குதலில் அவரது பணி பாராட்டப்பட்டது. அவரின் வீரத்தைப் பாராட்டி கமாண்டர் அபிநந்தனுக்கு வீர தீர செயலுக்கான வீர் சக்ரா விருது இன்று வழங்கப்பட்டது. இதையடுத்து, அபிநந்தன் விரைவில் கேப்டனாகவும் பணி உயர்வு பெறவிருக்கிறார்.
அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதினை வழங்கினார். ,இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட முக்கிய அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர். 2019-ல் பாக். போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதால் அபிநந்தனுக்கு கவுரவம் அளிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 சிஆர்பிஎஃப் படை வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டது. இதற்கு, பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பிப்ரவரி 26ஆம் தேதி, பாகிஸ்தானுக்குள் அத்துமீறி புகுந்து, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாள்மீது மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. அப்போது, அவர்களுக்கு ஆதரவாக வந்த பாகிஸ்தான் ராணுவ விமானத்தை தாக்கி அழித்த இந்திய விமானப்படை விமானமும், தாக்குதலுக்கு ஆளாகி பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தது.
பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்த அந்த விமானத்தில் இருந்த இந்திய விமானி அபிநந்தன் பாராசூட் மூலம் தப்பிய நிலையில், அவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைபிடித்தனர். இது தொடர்பான வீடியோ உலகம் முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்தியா மற்றும் மற்ற உலக நாடுகளின் கடும் அழுத்தத்திற்குப் பின் அபிநந்தனை நல்லெண்ண அடிப்படையில் எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார். தொடர்ந்து மார்ச் 1ஆம் தேதி இந்தியாவிற்கு அவர் திரும்பினார்.
அபிநந்தனின் வீர தீர செயலுக்காக வீர் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.