டில்லி:
ஜனாதிபதி தேர்தலில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த, எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேச பாரதியஜனதா அரசு முடிவு செய்துள்ளது.
தற்போதைய ஜனாதிபதியின் பதவி காலம் அடுத்த மாதம் முடிவடைய இருப்பதால், புதிய ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பாஜ. சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் நாளை (வெள்ளிக்கிழமை) அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கம்யூனிஸ்டு தலைவர் சீதாராம் யெச்சூரியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
பாரதியஜனதா குழுவினர் ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் படேல் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின், சதிஷ் மிஸ்ராவுடன் ஆலோசனை நடத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்தே, எதிர்க்கட்சிகள் சார்பாக வேட்பாளர் நிறுத்தப்படுவதை தடுத்து, ஜனாதிபதி தேர்தலில் போட்டி ஏற்படாத வகையில் ஒருமித்த கருத்துடைய தலைவரை நிறுத்த பாரதியஜனதா முயற்சித்து வருகிறது.
வரும் 24ம் தேதி மோடி அமெரிக்கா செல்ல இருப்பதால், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வரும் 23ம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.