வாஷிங்டன்:
மெரிக்க அதிபர் தேர்தல் பற்றிய கருத்துகணிப்பில் டிரம்பரை விட 5 பாய்ண்ட் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார் ஹிலாரி கிளிண்டன்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 8ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஆளும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும், முன்னாள் அதிபர் கிளின்டனின் மனைவியுமான ஹிலாரி, குடியரசு கட்சி வேட்பாளர் தொழிலதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோருக்கிடையே நேரடி போட்டி நிலவுகிறது.
hilary-trump
இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வெற்றி பெறுவது யார் என்பது தொடர்பாக கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியிடப்படுகின்றன.
இதுவரை வெளியான கருத்துக்கணிப்புகளில் ஹிலாரி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
கடந்த மூன்று நாட்களுக்கு நடைபெற்ற  நேரடி விவாதத்தற்குப் பிறகு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பிலும் டிரம்பைவிட ஹிலாரிக்கே அதிக செல்வாக்கு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ராய்ட்டர் மற்றும் இப்சோஸ் இணைந்து கடந்த மாதம் 23-ம் தேதி முதல் 29-ம் தேதிவரை நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதில், ஹிலாரி கிளிண்டனுக்கு 43 சதவீதம் பேரும், டிரம்புக்கு 38 சதவீதம் பேரும் வாக்களிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மீதமுள்ள 19 சதவீதம் பேர் யாரையும் தேர்வு செய்ய விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளனர். இதனால் 5 சதவீத கூடுதல் ஆதரவுடன் ஹிலாரி முன்னிலையில் இருக்கிறார்.
இதேபோல் 4 வேட்பாளர்களையும் உள்ளடக்கிய ஒரு கருத்துக்கணிப்பு முடிவும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஹிலாரி 4 சதவீத வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருக்கிறார்.
இந்த கருத்துக் கணிப்பில் ஹிலாரிக்கு 42 சதவீதம் ஆதரவு கிடைத்தது. டிரம்புக்கு 38 சதவீதமும், விடுதலை கட்சி வேட்பாளர் கேரி ஜான்சனுகு 7 சதவீதமும், பசுமை கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டெயினுக்கு 3 சதவீத ஆதரவும் கிடைத்தது.
இதுவரை வெளியாகி உள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளை பார்க்கையில், ஹிலாரி கிளிண்டன் அதிபராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.