Home உலகம்

அதிபர் தேர்தல்: ஹிலாரி – டிரம்ப் இடையே காரசார நேரடி இறுதி விவாதம்….!

வாஷிங்டன்:
மெரிக்க அதிபர் தேர்தலையொட்டி இரண்டு வேட்பாளர்களுக்கும் நேரடி விவாதம் இன்று காலை நடைபெற்றது.
அடுத்த மாதம் 8-ந் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல்  நடைபெற இருக்கிறது.  இதில், ஒபாமாவின் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் தொழிலதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் மக்கள் முன்னிலையில் நேரடி விவாதத்தில் ஈடுபடுவது வழக்கம்.

ஹிலாரி - டிரம்ப் நேரடி விவாதம்
ஹிலாரி – டிரம்ப் நேரடி விவாதம்

அதன்படி ஹிலாரி கிளிண்டன்- டொனால்டு டிரம்ப் இடையே ஏற்கனவே 2 விவாதங்கள் நடைபெற்று முடிந்துவிட்டன. அதைத்தொடர்ந்து இன்று  3-வது இறுதி விவாதம் லாஸ்வேகாசில் நடந்தது.
இதில், இருவரும் காரசாரமாக மோதிக் கொண்டனர். ஹிலாரி கிளிண்டன் மீது டொனால்டு டிரம்ப் ஆவேசமான குற்றச்சாட்டுகளை கூறினார்.
கடந்த இரண்டுமுறை விவாதம் நடைபெற இருக்கும்போது இருவரும் ஒருவருக்கொருவர் கை குலுக்கி கொள்வது வழக்கம். ஆனால் இன்றைய விவாதத்துக்கு வந்த இருவரும் கைகுலுக்கவில்லை.
 
முதல் விவாதம் செப்டம்பர் 26-ம் ஹாப்ஸ்ட்ரா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அடுத்த விவாதம் அக்டோபர் 9-ம் தேதி வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. மூன்றாவது விவாதம் அக்டோபர் 19-ல் நெவடா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றிருக்கிறது.
விவாத அரங்கம்
விவாத அரங்கம்

இந்த விவாத நிகழ்ச்சிக்கு ஃபாக்ஸ் நியூஸ் செய்திச் சேனலின் கிறிஸ் வாலஸ் நெறியாளராக செயல்பட்டார். ஊடகங்கள் அனைத்தும் ஹிலாரிக்கு ஆதரவாக செயல்படுகின்றன என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் டிரம்ப் இறுதிச்சுற்று விவாதத்திலும் அதைக் குறிப்பிட்டார்.
இறுதி விவாதத்தின் சில முக்கிய அம்சங்கள்:
முதலில் விவாதத்தைத் தொடங்கிய ஹிலாரி கிளிண்டன், “டிரான்ஸ் பசிபிக் பார்ட்னர்ஷிப் ஒப்பந்தத்தை நான் வலுவாக எதிர்க்கிறேன். இந்த ஒப்பந்தத்தால் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், வருவாய் உயரும், தேச பாதுகாப்புக்கு நலன் கிடைக்கும் என எதுவுமே நிரூபிக்கப்படவில்லை.
இந்நிலையில் நான் இந்த ஒப்பந்தத்தை இப்போது எதிர்ப்பது போலவே தேர்தலுக்குப் பின்னரும் எதிர்ப்பேன். ஒருவேளை அமெரிக்க அதிபரானாலும் எதிர்ப்பேன்” என்றார்.
 
மேலும் ஹிலாரி கூறும் போது, நான் அதிபர் ஆனால், பெண்கள் நலன் மற்றும் ஓரின சேர்க்கை உரிமைகளுக்கு ஆதரவாக இருப்பேன் என்றார்.
முன்னாள் அதிபர் கிளிண்டன் தன் மகளுடன் விவாதத்தை காண்கிறார்
முன்னாள் அதிபர் கிளிண்டன் தன் மகளுடன் விவாதத்தை காண்கிறார்

ஆனால், ஹிலாரி இதே திட்டத்துக்கு முன்னர் ஆதரவு தெரிவித்திருந்தால் அவரது நிலைப்பாட்டை தற்போது மாற்றிக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காடி டிரம்ப் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய ஹிலாரி, குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் அமெரிக்க வேலை வாய்ப்பு களை வெளிநாட்டுக்குத் தாரை வார்த்துவிட்டு தற்போது முதலைக் கண்ணீர் வடிக்கிறார். அவருடைய நிறுவனங்கள் மெக்சிகோ உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து அவுட்சோர்சிங் முறையில் ஆதாயம் பெற்று வருகிறது.
மேலும், லாஸ் வெகாஸில் உள்ள அவரது விடுதிக்கு சீன ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆதாயம் பெறுவது சீன தொழிற்சாலைகளேத் தவிர அமெரிக்க தொழிற்சாலைகள் அல்ல. இப்படி அமெரிக்க பொருளா தாரம், அமெரிக்காவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவிட்டு முதலைக் கண்ணீர் வடிக்கிறார் டிரம்ப்” என்று கடுமையாக சாடினார்.
டிரம்ப் தனது மனைவி மெலினாவுடன் விவாதத்துக்கு வந்தபோது
டிரம்ப் தனது மனைவி மெலினாவுடன் விவாதத்துக்கு வந்தபோது

டொனால்டு டிரம்ப் கூறும் போது,
கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவேன். துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமையை நிலைநாட்டுவேன் என்றார்.
ஹிலாரி கிளிண்டன் பேசும் போது, ரஷிய அதிபர் புதின் டெனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதையே விரும்புகிறார். அவர் டொனால்டு டிரம்பை பொம்மையாக ஆட்டி படைக்கலாம் என கருதுகிறார் என்று கூறினார்.
அதற்கு பதில் கூறிய டிரம்ப், புதினை எனக்கு யார் என்றே தெரியாது. ஆனாலும் அவர் என்னைப் பற்றி நல்ல கருத்தைதான் கூறி இருக்கிறார் என்றார்.
மேலும் பத்திரிகைகள் தனக்கு எதிராக தவறான தகவல்களை வெளியிட்டு வாக்காளர்களை குழப்பி வருகின்றன என்றும் டிரம்ப் குற்றம் சாட்டினார்.
”அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட ஹிலாரியை அனுமதித்திருக்கக் கூடாது. அவர் போட்டியிடாமல் இருப்பதே நல்லது” என டிரம்ப் கூறினார்.
அப்போது விவாத நிகழ்ச்சிக்கு நெறியாளராக செயல்பட்ட கிறிஸ் வாலஸ் அவரது கருத்தை விரிவாக எடுத்து உரைக்குமாறு பலமுறை வலியுறுத்தினார். ஆனால், “டிரம்ப் தொடர்ந்து நேரம் வரும்வரை அதற்கான விளக்கத்தைத் தெரிவிப்பேன். அதுவரை காத்திருங்கள்” என பூடகமாகக் கூறிச் சென்றார்.
இன்றைய தினம் நடந்த வார்த்தைப் போரில் இந்த உலகுக்கு எதிராக நாங்கள் வெற்றி கண்டுள்ளோம். அமெரிக்காவை அமெரிக்கர்களே ஆள்வார்கள் என்பதை மீண்டும் இவ்வுலகுக்கு நிரூபித்திருக்கிறோம். இந்த விவாதங்கள் நிறைவுபெற்றிருக்கலாம் ஆனால் உண்மையான போட்டி இனிமேல்தான் ஆரம்பமாகிறது.
டொனால்டு டிரம்ப் கூறும் போது, ஒரு பெண் என் மீது பொய்யான செக்ஸ் குற்றச்சாட்டை கூறி இருக்கிறார். அந்த பொய்யை உண்மை போல் மாற்றி ஹிலாரி கிளிண்டன் பிரசாரம் செய்கிறார். ஹிலாரி ஒரு பொய்யான பேர்வழி. இவர் ஒரு மோசமான பெண்.
விவாதத்தை பார்த்துக்கொண்டிருந்தவர்கள்
விவாதத்தை பார்த்துக்கொண்டிருந்தவர்கள்

இவரை ஜனாதிபதியாக மக்கள் தேர்ந்து எடுக்க கூடாது. ஒரு வேளை இவர் வெற்றி பெற்றாலும் இந்த வெற்றியை நான் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
30 ஆண்டுகளாக ஹிலாரி அரசியலில் இருக்கிறார். இவரால் இந்த நாட்டுக்கு எந்த பயனும் இல்லை என்று பேசினார்.
இதற்கு பதில் கூறிய ஹிலாரி, மக்கள் மத்தியில் டொனால்டு டிரம்புக்கு ஆதரவு இல்லை. எனவேதான் தேவையற்ற குற்றச்சாட்டுகளை என் மீது சுமத்துகிறார் என்று கூறினார்.
கிளிண்டன் கூடாரம் உங்கள் அனைவரையும் பொய்களால் துளைத்தெடுக்கப் போகிறது. அவருடைய ஒவ்வொரு தாக்குதலையும் ஊடகங்கள் ஆதரிக்கும்.
அவருடைய ஊழல்களை காண மறுத்து பார்வையற்றிருப்பது போல் செயல்படும். எல்லாவற்றிற்கும் தயாராக இருங்கள்” என்றார்.
இவ்வாறாக ஹிலாரி, டிரம்ப் விவாதம் வழக்கமான காரசார குற்றச்சாட்டுகளுடன் முற்று பெற்றது.
us-6
இன்றைய இறுதி தொலைக்காட்சி நேரடி விவாதத்துக்கு பிறகு, சிஎன்என் செய்தி நிறுவனமும் ஓஆர்சி கருத்துக்கணிப்பு நிறுவனமும் மேற்கொண்ட கணிப்பின்படி ஹிலாரி கிளிண்டனுக்கு 52% ஆதரவும், டிரம்புக்கு 39% ஆதரவும் கிடைத்துள்ளது.
மூன்று சுற்றுகளிலுமே ஹிலாரியே மக்கள் மத்தியில் முன்னிலை பெற்றிருப்பதால் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக சர்வதேச அரசியல் நோக்கர்களால் கூறப்படுகிறது.
இந்தக் கணிப்பில் 4% அளவுக்கு முன்பின் மாறுதல்கள் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தக் கணிப்பு குறித்து கருத்து தெரிவிக்க டொனால்டு டிரம்ப் மறுத்துவிட்டார்.