குடியரசு தலைவர் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான ஜூன் 29-க்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே குடியரசு தலைவருக்கான வேட்பாளரை அறிவிப்பதில் இன்னமும் குழப்பம் நீடித்து வருகிறது.

எந்த ஒரு விவகாரத்திலும் தனது அதிரடி முடிவுகளால் அனைவரையும் திக்குமுக்காட வைப்பதில் வல்லமை படைத்த பா.ஜ.க. இம்முறை ஒருமித்த கருத்தை ஏற்படுத்த பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது.

776 எம்.பி. மற்றும் 4120 எம்.எல்.ஏ.க்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க உள்ளனர் இவர்களின் மொத்த வாக்குகள் 1079394. இதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 525500 வாக்குகள் உள்ளன.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 259290 வாக்குகள் மட்டுமே உள்ளன.

பிராந்திய மற்றும் இதர கட்சிகளுக்கு 294604 வாக்குகள் உள்ளன.

குடியரசு தலைவர் வேட்பாளர் விவகாரத்தில் ஒருமித்த கருத்து ஏற்படாமல் போட்டி ஏற்படும் பட்சத்தில் வெற்றி பெரும் வேட்பாளர் சுமார் 539700 வாக்குகள் பெற வேண்டும். அதற்கு தே.ஜ.கூட்டணிக்கு இன்னும் 13800 வாக்குகள் தேவைப்படுகிறது.

தே.ஜ.கூட்டணி வேட்பாளர்களாக தமிழிசை சௌந்தரராஜன், திரௌபதி முர்மு, ஆரிஃப் முகமது கான், வெங்கையா நாயுடு உள்ளிட்டவர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது என்ற போதும் பா.ஜ.க. இதில் கடைசி நிமிட அதிரடிகளில் ஈடுபட்டு வரலாறு படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.மு.கூட்டணி சார்பில் சரத் பவாரை நிறுத்த மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை என்று கூறப்படும் நிலையில் மூன்றாவது அணி சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மம்தா பானர்ஜீ முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

கோபாலகிருஷ்ண காந்தி மற்றும் பரூக் அப்துல்லா ஆகிய இருவரில் ஒருவரை வேட்பாளராக நிறுத்த எதிர்கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த மம்தா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

எனினும், பா.ஜ.க. தனது வேட்பாளர் குறித்து அறிவித்த பின்னரே இதில் எந்த ஒரு முடிவும் எட்டப்படும் என்று தெரிகிறது.

தே.ஜ. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளை வைத்துள்ள ஐக்கிய ஜனதாதளம் (22601 வாக்குகள்) ஏற்கனவே 2012ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் பிரணாப் முகர்ஜியை குடியரசு தலைவர் வேட்பாளராக நிறுத்திய போது பா.ஜ.க. கூட்டணியில் இருந்த நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவாக வாக்களித்தது.

மேலும், குடியரசு தலைவர் வேட்பாளர் விவகாரத்தில் நிதிஷ் குமார் தனது கூட்டணிக்கு எதிரான முடிவுகளை எடுப்பதில் வல்லவர் என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபித்திருப்பதால் இந்த விவகாரத்தில் நிதிஷ் குமாரை பகைத்துக்கொள்ள பா.ஜ.க. விரும்பாது என்று கூறப்படுகிறது.

தவிர, 14940 வாக்குகளை கொண்ட அ.இ.அ.தி.மு.க. ஒற்றைத் தலைமைக்கான சண்டையில் தீவிரம் காட்டி வருவதால் சசிகலா, எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ். இடையே வாக்குகள் சிதறாமல் பஞ்சாயத்து செய்ய வேண்டிய இக்கட்டான சூழலிலும் பா.ஜ.க. உள்ளது.

இருந்தபோதும், 45550 ஓட்டுகள் வைத்துள்ள ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆதரவு தவிர பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆதரவும் தங்களுக்கு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருப்பதால் குடியரசு தலைவர் தேர்தலில் தங்களுக்கு பெருமளவு பாதிப்பு இருக்காது என்ற கண்ணோட்டத்தில் பா.ஜ.க. செயல்பட்டு வருவதோடு இன்னும் ஓரிரு தினங்களில் தங்கள் அணியின் வேட்பாளரை அறிவிக்கவும் தயாராகி வருகிறது.