டில்லி:

சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் அத்வானி, ஜே.பி.நட்டா உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் உள்பட எதிர்க்கட்சியினர் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சுஷ்மா உடலுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி அஞ்சலி

மறைந்த பாஜக மூத்த தலைவரும், வெளியுறவுத் துறை முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் (வயது 67), உடல்நலக்குறைவு காரணமாக, டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு காலமானார்.

அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி தனது சுட்டுரை பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,  இந்திய வரலாற்றில் ஓர் அத்தியாயம் முடிந்துவிட்டது. ஏழை மக்களின் நலனுக்காகவும், பொது வாழ்வுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு தலைவரின் மறைவால் நாடே துயரத்தில் உள்ளது. தனது அன்பினால் கோடிக்கணக்கான மக்களின் மனதில் இடம்பிடித்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

சுஷ்மா உடலுக்கு பிரதமர் மோடி, பாஜக தலைவர் அத்வானி அஞ்சலி

டில்லியில் உள்ள சுஷ்மா வீட்டில் வைக்கப்பட்டுள்ள  அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினார். அப்போது குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உடனிருந்தார்.

பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. இந்த முடிவை அவர் கடந்த நவம்பர் மாதத்திலேயே அறிவித்திருந்தார்.

சுஷ்மா ஸ்வராஜுக்கு ஸ்வராஜ் கெளஷல் என்ற கணவரும், பான்சுரி என்ற மகளும் உள்ளனர்.