டெல்லி: 2022-23-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் உரையுடன் இன்று தொடங்கியது. இந்த உரையின்போது, கற்க கசடற கற்பவை கற்ற பின் அதற்கு தக என்ற திருக்குறளை மேற்கோளிட்டு பதியதுடன், மத்திய அரசின் தடுப்பூசி, உணவு விநியோகம் உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
2022ம் ஆண்டின் நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் என்பதால் இன்று தொடங்கியது. முதல்கூட்டர் என்பதால், குடியரசுதலைவர் ராம்நாத் கோவிந்த், இரு அவை களின் கூட்டுக்கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் 5வது முறையாக இன்று குடியரசு தலைவர் உரையாற்றினார்.
லோக்சபா அட்டவணையின்படி, காலை 11 மணிக்கு மத்திய மண்டபத்தில் ஜனாதிபதி உரையுடன் அமர்வு தொடங்கியது. அப்போது, சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குத் தலைவணங்குகிறேன். சுதந்திரத்தின் 75 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்களித்த ஆளுமைகளையும் நான் மரியாதையுடன் நினைவு கூருகிறேன் என்று தொடங்கினார். இதனைத்தொடர்ந்து, வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாள் மற்றும் நேதாஜி 125வது பிறந்தநாள் கொண்டாடப்படுவதை நினைவுகூர்ந்தார்.
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட்டன. இந்தியா கொரோனாவால் கடுமையான சவால்களை சந்தித்தது; இருப்பினும், ஒரே ஆண்டில் 150 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைத்துள்ளது. இதற்கு எனது வாழ்த்துகள் என்று கூறியதுடன், திருக்குறளை மேற்கோள்காட்டி, அவர் எழுதிய ‘கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்ற திருக்குறளை குறிப்பிட்டார். அதுபோல, நாட்டின் கல்வித் திட்டங்கள் குறித்து பேசும் பொழுது திருக்குறளை மேற்கோள் காட்டினார்.
தொடர்ந்து பேசியவர், கொரோனாவை எதிர்த்துப் போராடும் இந்தியாவின் திறன் அதன் தடுப்பூசி திட்டத்தில் தெளிவாகத் தெரிகிறது. ஒரு வருடத்திற்குள், 150 கோடி டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளோம். இதுவரை, கொடுக்கப்பட்ட டோஸ்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை நாம் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இருக்கிறோம்” கடுமையான சவாலான காலத்திலிருந்து இந்தியா ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளது. கொரோனா 3வது அலைக்கு எதிராக இந்தியா போராடி வருகிறது. இந்திய தயாரிப்பு தடுப்பூசி உலகம் முழுவதும் 180 நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் மூத்த குடிமக்கள் 90% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த காலங்களை விட தற்போது இந்தியாவில் சுகாதார கட்டமைப்பு பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஏழை மக்கள் சுகாதார திட்டங்களை பெறுவதற்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது அடுத்த 25 ஆண்டுகளில் அனைத்து மக்களுக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் அரசு திட்டம். சமுதாயத்தில் சம நிலை இருக்க வேண்டும் என்பது அம்பேத்கரின் எண்ணம்; அதனை அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
பொருளாதாரத்தில் கடும் பாதிப்படைந்த ஏழைகளுக்கு நேரடியாக பணம் கிடைப்பதை அரசு உறுதி செய்திருக்கிறது. டிஜிட்டல் பண பரிவர்த்தனை கொரோனா பொதுமுடக்க காலத்தில் அனைவருக்கும் பேருதவியாக இருந்தது. கடந்த ஒரு ஆண்டில் நாட்டின் மொத்த வேளாண் உற்பத்தி பொருட்கள் 33 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 6 கோடி ஏழைகளுக்கு பைப் மூலம் குடிநீர் வசதி எனத் தெரிவித்தார். நாடு முழுவதும் நதிகளை இணைக்கும் திட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
‘ஸ்டார்ட் அப்’ திட்டங்கள் மூலம் 6 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் விவசாயிகளுக்கான நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. கடந்த ஒரு ஆண்டில் இந்தியாவின் மொத்த வேளாண் உற்பத்திப் பொருட்களின் சதவிகித 33% அதிகரித்துள்ளது. சிறு விவசாயிகள் அவர்களது அருகில் உள்ள பகுதிகளிலேயே தங்களது விளை பொருட்களை விற்பனை செய்யும் வகையிலான ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளது. இயற்கை உணவு பொருட்களை உற்பத்தி செய்யவும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. மேலும், ஆயுஷ்மான் பாரத் அட்டை ஏழைகளுக்கு பயனளித்துள்ளது. ஜன் ஔஷதி கேந்திராவில் குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதும் ஒரு சிறந்த நடவடிக்கையாகும் என்று மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் பாராட்டு தெரிவித்தார்.
இந்த வியாபாரிகளின் விற்பனை பொருட்களை ஆன்லைன் நிறுவனங்களுடன் அரசு இப்போது இணைக்கிறது என்றும், “யாரும் பசியுடன் வீடு திரும்பக்கூடாது என்பதற்காக, பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாதமும் ஏழைகளுக்கு எனது அரசு இலவச ரேஷன் விநியோகம் செய்தது. இன்று, இந்தியா உலகின் மிகப்பெரிய உணவு விநியோக திட்டத்தை நடத்தி வருகிறது.
தெருவோர வியாபாரிகளின் நலனுக்காக எனது அரசு பிரதமர் ஸ்வாநிதி யோஜனா திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. இதுவரை 28 லட்சம் தெருவோர வியாபாரிகள் ரூ.2,900 கோடி மதிப்பிலான நிதியுதவியைப் பெற்றுள்ளனர். இப்போது இந்த விற்பனையாளர்களை ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் மத்திய அரசு இணைக்கிறது.
எனது அரசாங்கம் JAM என்ற மும்மூர்த்திகளான ஜன்தன்-ஆதார்-மொபைல் இணைப்பு மூலம் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரமளிப்பின் தாக்கத்தையும் நாம் காணலாம். இதனால், தொற்றுநோய்களின் போது ஆயிரக்கணக்கான மக்கள் நேரடி பணப் பரிமாற்றங்களைப் பெற்றுள்ளனர்.
பெண்களுக்கு அதிகாரம் அளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறியவர், “பெண்களுக்கு அதிகாரமளிப்பது எனது அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகும். உஜ்வாலா யோஜனாவின் வெற்றிக்கு நாம் சாட்சிகள். முத்ரா யோஜனா மூலம், பெண்களின் தொழில்முனைவு மற்றும் திறன்கள் ஊக்கம் பெற்றுள்ளன. “பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ” மூலம், பல நேர்மறையான முடிவுகள் முன்னுக்கு வந்துள்ளன. மேலும், மகன்கள் மற்றும் மகள்களுக்கு சம அந்தஸ்து வழங்கும் முயற்சியில், பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவை எனது அரசு தாக்கல் செய்துள்ளது என்று கூறினார்.
விவசாயிகள் குறித்து கூறுகையில், நாட்டின் வளர்ச்சியில் நமது சிறு விவசாயிகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. எனது அரசாங்கம் எப்போதும் 80 சதவீத சிறு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியின் ஒரு பகுதியாக, இன்றுவரை 11 கோடி குடும்பங்கள் பயனடைந்துள்ளது என குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.
டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸில் இந்தியாவின் செயல்திறனைப் பாராட்டிய குடியரசுத் தலைவர், “டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் இளைஞர் சக்தியின் திறனைப் பார்த்தோம். இதுவரை இல்லாத வகையில் இந்தியா 7 பதக்கங்களை வென்றது. டோக்கியோ பாராலிம்பிக்ஸிலும் இந்தியா 19 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது”.
நாட்டில் கல்வியை மேம்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பட்டியலிட்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் சிறந்த வாய்ப்புகளை வழங்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அங்குள்ள 7 மருத்துவக் கல்லூரிகள் தவிர, 2 எய்ம்ஸ் மருத்துவமனைகளின் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாட்டின் பெண்களின் கற்றல் திறனை அதிகரிக்க, தேசிய கல்விக் கொள்கையில் பாலின சேர்க்கை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் உள்ள 33 சைனிக் பள்ளிகளிலும் பெண்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது பெருமைக்குரியது. தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண் வீரர்களை சேர்ப்பதற்கும் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பெண் வீரர்களின் முதல் தொகுதி ஜூன் 2022 இல் அனுமதிக்கப்படும், என்று கூறினார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு அரை மணி நேரம் கழித்து, மக்களவையில் வணிகப் பரிவர்த்தனை நடைபெறும். பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 8 ஆம் தேதி முடிவடைகிறது, இதில் முதல் பகுதி பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறும். பட்ஜெட் ஒதுக்கீடுகளை நிலைக்குழு ஆய்வு செய்வதால் பிப்ரவரி 12 முதல் மார்ச் 13 வரை இடைவேளை இருக்கும்.
இதனிடையே, குடியரசுத் தலைவர் தனது உரையை தொடங்கும் முன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீட் மசோதாவை தமிழக ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்காமல் தாமதம் செய்வதற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் உரையாற்றும் போது, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க முழக்கமிட்டனர் திமுக எம்பிக்கள்.