ராமேஸ்வரம்,

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று முதன்முறையாக தமிழகம் வருகிறார்.  ராமேஸ்வரம் கோவில் மற்றும் அப்துல்கலாம் நினைவகத்துக்கு வர இருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் ஜனாதிபதி  டில்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார்.  அங்கிருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபம் பகுதியில் உள்ள ஹெலிபேடில் இறங்கும் அவர் கார் மூலம் ராமேஸ்வரம் வருகிறார்.

அங்கு  ராமநாதசாமி கோவிலில் தரிசனம்  செய்துவிட்டு, மதியம் 1.30 மணி அளவில் முன்னாள் ஜனாதிபதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள   பேய்க்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவிடத்துக்கு சென்று அவர் மரியாதை செலுத்துகிறார்.

அதை முடித்துக்கொண்டு கார் மூலம் மதுரை திரும்பும் அவர், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார்.

இன்று மாலை சென்னை கிண்டியில் உள்ள  லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் நடக்கும் 32-வது இந்தியன் என்ஜினீரிங் மாநாட்டு நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உரையாற்றுகிறார்.

இரவு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தங்குகிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்கும் அவர், பின்னர்  டில்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

ஜனாதிபதி தமிழகம் வருகையையொட்டி சென்னை உள்பட   ராமேஸ்வரத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்வும், கலாம் நினைவகத்தை பார்வையிடவும் அவர் இன்று வருவதால், 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஏ.டி.ஜி.பி விஜயகுமார் தலைமையில் 2ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  மீனவர்கள் கடலுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.