டெல்லி: குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில், பாஜக முன்னாள் கவர்னர் முர்முவை களமிறக்கி உள்ளது. இதற்கு உ.பி. மாநிலம் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜூலை 18 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ளது.

இந்த தேர்தல், எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு (வயது 64) அறிவிக்கப்பட்டார். குடியரசுத் தலைவர் வேட்பாளராக பழங்குடியினப் பெண் ஒருவர் அறிவிக்கப்பட்டு உள்ளதற்கு பாஜக உள்பட பல்வேறு கட்சிகள் வரவேற்பு தெரிவித்து நேரக்கரம் நீட்டி உள்ளன.

இவர் தனது ஆதரவு கட்சி தலைவர்களுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து திரௌபதி முர்மு, மாநில கட்சிகளை சந்தித்து தனக்கு ஆதரவுகளை திரட்டி வருகிறார். இந்த நிலையில், திரௌபதி முர்முவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.

இது பாஜகவுக்கு ஆதரவாக எடுத்த முடிவு அல்ல, பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கையை மனதில் வைத்து எடுத்த முடிவு என்று தெரிவித்துள்ளார்.