காவிரி நதிநீர்ப் பங்கீட்டிற்கான வரைவுத் திட்டம் தயார்? 3ந்தேதி தெரியும்…!

Must read

டில்லி:

காவிரி விவகாரத்தில், உச்சநீதி மன்ற உத்தரவுப்படி, காவிரி நதிநீர்ப் பங்கீட்டிற்கான வரைவுத் திட்டம் தயாராகிவிட்டதாக நீர்வளத்துறை அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

நாளை மறுதினம் ( 3ந்தேதி) வழக்கு மீண்டும் உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. அப்போது,  அதை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகவும் டில்லி வட்டார தகவல்கள் கூறுகின்றன.  ஏற்கனவே மேலும் 2 வார கால அவகாசம் கேட்டு மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதி மன்றம் நிராகரித்துள்ள நிலையில், வரைவுத் திட்டம் தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.

காவிரி நீர் பிரச்சினையில் எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் உச்சநீதி மன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 16ந்தேதி இறுதித்தீர்ப்பை கூறியது.

மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலக்கெடுவுக்குள் அமைக்கவும் உத்தரவிட்டது.  அந்த காலக்கெட்டு மார்ச் 29ந்தேதியுடன் முடிவடைந்தது.

ஆனால், மத்திய அரசு, உச்சநீதி மன்றத் தீர்ப்பை, கர்நாடக சட்டமன்ற தேர்தலை கவனித்தில் கொண்டு, நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி, உச்சநீதி மன்றம் விதித்த கெடு முடிந்தபிறகு, உச்சநீதி மன்ற தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ள ஸகீம் என்ற வார்தைக்கு விளக்கம் தெரியவில்லை என்று மனு தாக்கல் செய்தது. இது தொடர்பான வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் 9ந்தேதி விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசின் இந்த செயல் தமிழக அரசியல் கட்சிகள் மற்றும், விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசு, விவசாயிகள் சங்கம் சார்பில், மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, காவிரி நதிநீர்ப் பங்கீட்டிற்கான வரைவுத் திட்டம் தயாரித்து மே 3ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தது.

இதற்கிடையில்,  மேலும் 2 வார கால அவகாசம் கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது மத்திய அரசு. இதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. அதையடுத்து, மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க உச்சநீதி மன்றம் மறுத்துவிட்டது.

இந்நிலையில், உச்சநீதி மன்ற உத்தரவுப்படி, காவிரி நதிநீர்ப் பங்கீட்டிற்கான வரைவுத் திட்டம் தயாராகிவிட்டதாக நீர்வளத்துறை அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த வரைவு திட்டம் வரும் 3ந்தேதி விசாரணையின்போது சமர்ப்பிக்கப்படும் என தெரிகிறது.

More articles

Latest article