சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக, தேர்தல் பிரசாரத்தின்போது, தேமுதிக தலைவர் பிரேமலதா அடிக்கடி கண்கலங்குவதும் கண்ணீர் வடிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். இது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து வாணாபுரம் பகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அப்போது, விஜயகாந்த் மறைவுக்கு நீங்க எல்லாம் வந்திருந்தீங்க. இரண்டு நாள் யாருமே சாப்பிடாமலேயே டிவி முன்பு நீங்கள் காட்டிய அன்பு, பல மடங்கு. கவலைப்படாதீங்க… விஜயகாந்த் விட்டுட்டு போயிட்டாரு என நினைக்காதீர்கள். உங்கள காப்பதற்கு நாங்கள் இருக்கிறோம். நான், என் இரண்டு மகன்கள் உங்களுக்காகவே இருப்போம். இனி ஒவ்வொரு தொண்டர்களுக்கும் என் வாழ்க்கையை அர்ப்பணிப்பேன். அப்போது கூட்டத்தை பார்த்து பிரமேலதா கண் கலங்கினார்.
தொடர்ந்து பேசியவர், ரிஷிவந்தியம் வந்த எனக்கு தலைவர் விஜயகாந்த் வாழ்ந்த நாட்கள் தான் ஞாபகம் வருகிறது. கேப்டன் விஜயகாந்த் மக்களை சந்தித்து எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். விஜயகாந்த் மறைவிற்கு பிறகு பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பிறகு ரிஷிவந்தியம் மக்களை சந்திக்க வந்துள்ளேன்.
நான் எந்த தொகுதிக்கு சென்றாலும் தைரியமாக பேசுவேன். ஆனால் கேப்டன் விஜயகாந்த் வாழ்ந்த இந்த பூமியை நிச்சயமாக என்னால் மறக்க முடிய வில்லை. எங்கு தேடினாலும் இதுபோன்ற உண்மையான பாசமான தொண்டர்களை பார்க்க முடியாது என்று கண்ணீர் வடித்தார்.
பிரேமலதா விஜயகாந்தின் இந்த கண்கலங்கும் நாடகம் தொடர்ந்து வருகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் பிரசாரத்தின்போது, மக்களிடம் அனுதாப வாக்குகளை பெறும் நோக்கில் மறைந்த விஜயகாந்த் குறித்து பேசி, கண்ணீர் வடிக்கிறார். இது சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிற து.
தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் தலைவராக உருவெடுத்த விஜயகாந்த், விரைவில் நோய்வாய்ப்பட்டு, இறக்க காரணமானவர் பிரேமலதா என்று அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் குற்றம் சாட்டி வரும் நிலையில், பிரேமலதாவின் பணப் பேராசைதான் கடந்த தேர்தலில் தேமுதிகவை டெபாசிட் இழக்க வைத்தது என்றும் கூறி வருகின்றனர்.
மேலும், விஜயகாந்த் மறைந்த நாளை, நன்நாள் என்று, அவர் அடக்கம் செய்யப்பட்ட அஞ்சலி நிகழ்ச்சியில் அசராமல் பேசிய பிரேமலதா, இன்று மக்களிடம் வாக்குகளை பெறும் நோக்கில், கண்கலங்கி, கண்ணீர் விட்டு பேசுவது, அவரது அரசியல் என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.