டெல்லி: கர்ப்பிணிகள், தங்களுக்காகவும், குழந்தைக்காகவும் கண்டிப்பாக தடுப்பூசி எடுக்க வேண்டும் என்று நிதிஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் அறிவுறுத்தி உள்ளார்.

நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்று பரவல் குறித்து, நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், சுகாதாரத்துறை இணைச் செயலர் லாவ் அகர்வால் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது,  கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியமானது. இந்தத் தடுப்பூசி அவர்களின் பாதுகாப்புக்கு மட்டுமல்லாது, குழந்தையின் பாதுகாப்புக்கும் நன்மை பயக்கும் என்றார்.

ஒருவேளை கர்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்தாத நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கும் செல்ல வாய்ப்பு உண்டு, இதனால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு உண்டு என்றவர்,  கர்ப்பிணிகள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அது மிக முக்கியமானது. அதற்கான வழிகாட்டல்களை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.