அகமதாபாத்
காணாமல் போய் கிடைத்த விஸ்வ இந்து பரிஷத் தலவர் பிரவின் தொகாடியா அரசை குறை கூறி உள்ளார்.
விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவின் தொகாடியா முன்பு ஒரு கூட்டத்தில் ஆட்சேபகரமாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டில் அவருக்கு பிடி வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அவரைக் கைது செய்ய போலிசார் சென்ற போது அவர் அங்கு இல்லை என கூறி போலீசார் திரும்பி வந்தனர் ஆனால் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளார் என ஒரு வதந்தி பரவியது.
அதனால் தொண்டர்கள் காவல்நிலையத்தை முற்றுகை இட்டு கோஷமிட்டனர். அதை தொடர்ந்து காவல்துறையினர் மும்முரமாக தேடி வந்தனர். அகமதாபாத் நகர் கோடார்பூர் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் பிரவீன் தொகாடியா மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். மருத்துவமனை நிர்வாகம் பிரவின் தொகாடியாவின் உடல்நிலை முழுவதுமாக சீரடைந்த பின் மருத்துவ மனையில் இருந்து அனுப்பபடுவார் என அறிவித்தது.
தற்போது பிரவின் தொகாடியா செய்தியாளர்களிடம் ”பழைய பொய்யான வழக்குகளில் எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருவது வருடங்களாக இந்த வாரண்ட் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இப்போது எனது குரலை ஒடுக்கவே இந்த வாரண்ட் தூசு தட்டி எடுக்கப்பட்டுள்ளது.
நான் அனேகமாக போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்படலாம் என அஞ்சுகிறேன். நான் எப்போதும் புலனாய்வுத் துறையின் கண்காணிப்பில் இருக்கிறேன். நான் ராமர் கோவிலுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது அரசுக்குப் பிடிக்கவில்லை. ராஜஸ்தான் மற்றும் குஜராத் அரசு மட்டும் அல்ல, மத்திய அரசுக்கும் நான் பேசுவது பிடிக்கவில்லை. இது குறித்து நான் மத்திய புலனாய்வுத் துறைக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.