உணவுக்கே தடுமாறிய பிரவின் ஜாதவ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பு

Must read

டோக்கியோ

ரு வேளை உணவு கூட சரியாகக் கிடைக்காமல் துன்புற்ற பிரவின் ஜாதவ் தற்போது ஒலிம்பிக் போட்டி வரை முன்னேறி உள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் தற்போது பங்கேற்றுள்ள வில்வித்தை வீரரான பிரவின் ஜாதவ் 1996 ஜூலை 6, மகாராஷ்டிராவில் சத்தாரா மாவட்டத்தின் சரடே கிராமத்தில் பிறந்தார். கடும் பஞ்சம் தலைவிரித்தாடும் அக்கிராமத்தில் மிகச் சிறிய குடிசை வீட்டில் அவர் குடும்பம் வாழ்ந்து வந்தது அவருடைய. பெற்றோர் இருவரும் தினக்கூலிகள். பிரவின் தனது பதின்ம வயதுகளில் வயலில் வேலைசெய்யும் தந்தைக்கு, உடன் நின்று உதவி செய்ததுமுண்டு. தனது மிகச் சிறிய வயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் காட்டிய பிரவீன் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டார்.

ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாகத் தனது முழு திறனை வெளிப்படுத்த முடியாமல் தவித்தார். அவரது 10ஆவது வயதில் வெறும் 22 கிலோ எடையுடன் மட்டுமே இருந்ததால் நினைத்த அளவிற்கு வெற்றிகள் பெற முடியவில்லை.  பள்ளிப் படிப்பு நின்று விடாமல் இருக்கவும், தன் குடும்பத்தின் வறுமை ஒழிந்திடவும் விளையாட்டு ஒன்றே சிறந்த வழி என்று அவரின் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் விகாஸ் புஜ்பால் பிரவீனை தொடக்கத்திலிருந்து ஊக்கப்படுத்தி உள்ளார்.

பிரவீனுடைய ஊட்டச்சத்தை மேம்படுத்த அவர் தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்தார். தவிரத் தனது மாணவனை அம்மாநில அரசின் க்ரிடா ப்ரபோதினி என்னும் விளையாட்டு பள்ளியில் சேர்த்துவிட முழு முயற்சிகளை மேற்கொண்டார். பிரவீன் ஓட்டப்பந்தயத்தில் இருந்து வில்வித்தையில் கவனம் செலுத்த தொடங்கியபோது 800 மீட்டர் தூரத்தை 3 நிமிடம் 40 வினாடிக்குள் கடக்கும் அளவிற்கு முன்னேற்றம் அடைந்திருந்தார். வில்வித்தை பயிற்சியின் போது அதிக எடையுள்ள வில்லை தூக்கிச் சுமப்பதற்கு அவரின் உடல் எளிதாகக் கைகொடுக்கவில்லை என்பதால் அவரின் பயிற்சி பாதித்து பயிற்சிக்கூடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பள்ளி ஆசிரியர் விகாஸ் இப்போதும்  உதவிக்கு வந்து பெரும் முயற்சி செய்து அதே பயிற்சிக்கூடத்தில் பிரவின் சேர்ந்திட மற்றுமொரு வாய்ப்பையும் ஏற்படுத்திக்கொடுத்தார். தன்னை நிரூபிக்க பிரவீனுக்கு கடைசி வாய்ப்பாய் ஐந்து ஷாட்டுகளை அப்பயிற்சி நிர்வாகம் வழங்கியபோது அதில் 45க்கும் மேல் ஸ்கோர் செய்து அசத்தினார். பிறகு தொடர்ந்து முன்னேற்றம் கண்டவர், தனது வெற்றிகளின் மூலம் இந்திய ராணுவத்தில் 2017-ம் ஆண்டு பணியமர்த்தப்பட்டு 2019-ம் ஆண்டில் ஹவல்தாராகப் பணி உயர்வும் பெற்றார்.

கடந்த 2016-ம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற ஆசியக் கோப்பையின் ஸ்டேஜ்-1 பிரிவில் இந்தியாவிற்காக முதன்முதலில் போட்டியிட்டார் பிரவீன். அதில் ஆண்கள் ரீகர்வ் அணியில் வெண்கலமும் வென்றார். 2019-ம் ஆண்டில் நடைபெற்ற உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆண்கள் அணியிலும் இடம் பெற்றிருந்தார் . 2005-ம் ஆண்டிற்குப் பிறகு இந்தத் தொடரில்தான் இந்திய ஆண்கள் அணி முதன்முறையாக இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தது. அதன்மூலம், அடானு தாஸ், தருன்தீப் ராய் மற்றும் பிரவின் அடங்கிய இந்த அணி டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான நுழைவுச்சீட்டையும் பெற்றது.

பிரவீன் தனது ஒலிம்பிக் போட்டிகளுக்கான பயிற்சிகளைச் சென்ற வருடம் புனேவில் உள்ள ராணுவ விளையாட்டு பயிற்சிக்கூடத்தில் தொடங்கினார். இதற்கு இடையே கொரோனா பெருந்தொற்றால் ஊரடங்கு அமலுக்கு வரவே வீட்டுக்குச் செல்லாமல் அங்கேயே தங்கிவிட்டார். கடந்த 2018ஆம் ஆண்டு குடும்பத்தை பிரிந்து 30 மாதங்களுக்குப் பிறகு இவ்வருடம் மார்ச் மாதமே தன் குடும்பத்தை மீண்டும் பிரவின் சந்தித்தார் .

தற்போதைய ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் பிரவீன் ஜாதவ் தனது கடின உழைப்பால் இந்த அளவு முன்னேறி உள்ளார் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மையாகும்.

அவரின் உழைப்புக்கு பத்திரிகை.காம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

More articles

Latest article