டில்லி

னைவரும் ஒருங்கிணைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

தற்போது டில்லியில் உள்ள மேற்கு வங்க முதல்வரும் திருணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பிரதமர் மோடியை சந்தித்தார்.  அத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஆனந்த் சர்மா, கமல்நாத் உள்ளிட்ட பலரைச் சந்தித்துள்ளார். 

நேற்று அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை அவர் இல்லத்தில் சந்தித்தார். அதன் பிறகு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல தலைவர்களை மம்தா சந்தித்தார்.   இந்த சந்திப்புக்களுக்கு இடையே மம்தா பானர்ஜி செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு விடையளித்துள்ளார்.

மம்தா பானர்ஜி, “அனைத்து தலைவர்களுடனான சந்திப்பும் சிறப்பாக அமைந்தது.  நான் அரசியல் சூழ, பெகாசஸ், கொரோனா குறித்த  எதிர்க்கட்சிகளின் நிலை குறித்து தலைவர்களுடன் பேசி உள்ளேன்.  ஒரு சாதகமான முடிவு எதிர்காலத்தில் கிடைக்கும். தனியாக நம்மால் பாஜகவை வீழ்த்த எதுவும் செய்ய முடியாது.

எனவே அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பணியாற்றி பாஜகவை வீழ்த்த வேண்டும் என நான் அழைப்பு விடுக்கிறேன்.   இதற்குத் தலைமை ஏற்பது யார் என்பதைச் சொல்ல நான் ஜோசியக்காரர் இல்லை.  நாடாளுமன்ற கூட்ட்த் தொடர் முடிந்ததும் எதிர்க்கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.