சென்னை: வாடகை காரை கடத்தியவர்களை, தனி ஒருவனாக விரட்டி பிடித்த காவலர் பிரசாந்த்  தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. காவலரின் துணிச்சலான நடவடிக்கையை எஸ்பி அர்ஜூன் சரவணன் பாட்டியுள்ளார்.

மதுரை சேர்ந்த  வெங்கடேசன் மற்றும் வேல்பாண்டி ஆகியோர்  காஞ்சிபுரத்தில் வாடகைக்குக் கார் ஒன்றை எடுத்து உள்ளனர். இவர்கள் காஞ்சிபுரத்தில் இருந்து புறவழிச்சாலை வழியாக  சென்று கொண்டிருந்த போதுழ , டிரைவரை வெங்கடேசன் மற்றும் வேல்பாண்டி இருவரும் சரமாரியாகத் தாக்கியதுடன், ஓட்டுநரைச் சாலையில் தள்ளிவிட்டுவிட்டு,  இருவரும் காரை கடத்திச் சென்றுள்ளனர்.

இதையடுத்து ஓட்டுநர் உடனடியாக காரின் உரிமையாளர் பிராகாஷ்குமாருக்கு இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து காவல்துறையினர் உடனே மாநிலம் முழுவதும் உள்ள காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து, வாகன சோதனை நடத்த உத்தரவிட்டனர். காஞ்சிபுர மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்குக் கடத்தப்பட்ட கார் குறித்து தகவல்களை அனுப்பி உள்ளார். அதன்படி நேற்று மாலை பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமல கண்ணனுக்கும் இந்த தகவல் கிடைத்துள்ளது

இந்த நிலையில், வாடகை காரை கடத்திய நபர்கள், தஞ்சாவூர் வழியாக சென்றுகொண்டிருந்தபோது,   தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் , காவல்பணியில் ஈடுபட்டிருந்த காவலர் பிரசாந்த்துக்கும் இந்த தகவல் கிடைத்தது. அந்த நேரத்தில், கடத்தப்பட்ட கார் அந்த பகுதியில் நிற்பதை கண்ட காவலர் பிரசாந்த்,  அதில் இருந்த இருவரையும் விசாரித்து உள்ளார். இதனால் உஷாரான இருவரையும் காரை போட்டுவிட்டு ஓடினர். அவர்களை காவலர் பிரசாந்த்  துரத்திச் சென்றுள்ளார்.

காவலர் தங்களைத் துரத்தி வருவதைப் பார்த்த குற்றவாளிகள் அவரை தாக்கி தள்ளிவிட்டு, தப்பி ஓடி உள்ளனர். கீழே விழுந்ததில் காவலர் பிரசாந்த்தின் கைகளில் காயம் ஏற்பட்டது. இருப்பினும், விடாமல் குற்றவாளிகளைத் துரத்திச் சென்ற காவலர் பிரசாந்த், அப்பகுதியில் இருந்த போக்குவரத்து காவலர்களின் உதவியுடன் தப்பி ஓடிய வேல்பாண்டி என்பவரை மடக்கிப்பிடித்தனர். மற்றொரு குற்றவாளியான வெங்கடேசன் தப்பி ஓடி விட்டார்.

காயத்துடன் விடாமல் துரத்திச்சென்ற பிரசாந்தை அந்த பகுதி மக்க வெகுவாக பாராடினார். காவலர் பிரசாந்த் விரட்டிப் பிடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.  காவலர் பிரசாந்தின் நடவடிக்கையை பாராட்டி,  குற்ற புலனாய்வு பிரிவு எஸ்பி அர்ஜூன் சரவணன் வெகுவாக பாராட்டி டிவிட் பதிவிட்டு உள்ளார்.

அதில்,

“தனி ஒருவன்.

டிரைவரை தாக்கி டாக்சி கடத்தல்.

அலறிய மைக்கால் நம்பர் ஞாபகத்தில்

களவுபோன கார் கண்முன்னே.

உடன் உதவ யாருமில்லை

கையில் ஆயுதம் எதுவுமில்லை

இருந்தது நெஞ்சுரம் மட்டுமே

விழுந்தது நீ!

எழுந்தது தமிழக காவல்துறை!

வாழ்த்துகள் காவலர் பிரசாந்த்” என்று பாராட்டி உள்ளார். குற்ற புலனாய்வு பிரிவு எஸ்பி அர்ஜூன் சரவணன் மட்டுமல்ல, ஏராளமான காவல்துறை உயர் அதிகாரிகள் காவலர் பிரசாந்தை பாராட்டி வருகிறார்கள்.

இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.