தெலுங்கு சினிமாவின் நடிகர் சங்கத்தின் தலைவர் மற்றும் பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். இவரை எதிர்த்து நடிகர் பிரகாஷ் ராஜ் களம் இறங்கினார்.

மொத்தம் உள்ள 900 உறுப்பினர்களில் 833 பேருக்குத்தான் ஓட்டுப் போடும் உரிமை இருந்தது. இதில் 655 ஓட்டுக்கள் பதிவானது. விஷ்ணு மஞ்சுக்கு 381 ஓட்டுக்களும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் 274 ஓட்டுக்களும் பெற்றார். இதன்மூலம் 113 ஓட்டு வித்தியாசத்தில் விஷ்ணு மஞ்சுவிடம் தோல்வியடைந்தார் பிரகாஷ்ராஜ்.

ஜூனியர் என்.டி.ஆர்., பிரபாஸ், சமந்தா, நாக சைதன்யா போன்ற முன்னணி நடிகர்கள் ஓட்டுப்பதிவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஷ்ணு மஞ்சு தலைமையிலான அணிக்கு ஆந்திர அரசின் ஒத்துழைப்பும், பிரகாஷ்ராஜ் தலைமையிலான அணிக்கு சிரஞ்சீவியின் ஒத்துழைப்பும் இருந்தது.

தேர்தல் தோல்விக்குப் பிறகு, தன்னை ஒரு அந்நியனாகப் பார்க்கும் நடிகர்களிடையே தான் இருக்க விரும்பவில்லை என்று கூறி மா அமைப்பிலிருந்து ராஜினாமா செய்தார் பிரகாஷ்ராஜ். அவரைத் தொடர்ந்து பிரகாஷ்ராஜ் அணியிலிருந்து வெற்றி பெற்ற 11 உறுப்பினர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.

இதனிடையே, பிரகாஷ்ராஜ் தனது அணியினருடன் இணைந்து புதிய சங்கமொன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்கு முன்னோட்டமாகவே சமீபத்தில் தனது ட்விட்டர் பதிவில், “என் பக்கம் நின்ற என் அன்பார்ந்த நடிகர் சங்க உறுப்பினர்களே. எனது ராஜினாமாவுக்குப் பின் ஆழ்ந்த அர்த்தம் இருக்கிறது.

நீங்கள் காட்டிய அன்புக்கும் ஆதரவுக்கும் நாங்கள் பொறுப்பு என்பதை எங்கள் அணி உணர்ந்துள்ளது. உங்களை நாங்கள் என்றும் கைவிடமாட்டோம். விரைவில் உங்களுக்கு விளக்கம் தருகிறோம். எங்களை நினைத்து நீங்கள் பெருமையடைவீர்கள்” என்று பிரகாஷ்ராஜ் பதிவிட்டுள்ளார் .